Published : 18 Dec 2015 09:11 AM
Last Updated : 18 Dec 2015 09:11 AM
தமிழ் எழுத்துலகம் 82 வயது வரை தூக்கிவைத்து கொண் டாடத் தவறிய ஆளுமை இவர். புதி னங்கள், திறனாய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என பன்முகத் திறன் கொண்டு விளங்கினாலும் சிறுகதை எழுத்தாளர் ஆ.மாதவன் என்பதே அடையாளமாக உருப் பெற்று நிற்கின்றது.
திருவனந்தபுரத்தில் உள்ள சாலை பகுதி தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி. அங்கு 75 வயது வரை பாத்திரக் கடை வைத்திருந் தார் ஆ.மாதவன். கடையில் பாத்தி ரங்கள் தகதகக்க, அந்த சாலைப் பகுதியில் உலாவிய மனிதர்களை கதாபாத்திரமாக்கி எழுத்துலகில் முத்திரை பதித்தார். திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தையும் செதுக்கி, வளர்த்தெடுத்த பிதாமகன். 2002-ம் ஆண்டு மனைவி சாந்தா, 2004-ம் ஆண்டு மகன் கோவிந்தராஜன் ஆகியோரின் மறைவுக்குப் பிறகு இப்போது திருவனந்தபுரம் கைத முக்கு பகுதியில் மூத்த மகள் கலைச்செல்வியின் வீட்டில் வசிக்கிறார் ஆ.மாதவன்.
எப்போதோ கிடைத்திருக்க வேண்டிய சாகித்ய அகாடமி விருது இப்போதுதான் இவருக்கு கிடைத் துள்ளது. அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் வெளியிட்ட ‘இலக்கியச் சுவடுகள்’ என்ற கட்டுரைத் தொகுப் புக்காக இந்த விருது வழங்கப் பட்டுள்ளது. இந்நிலையில் ‘தி இந்து’ வுக்காக சிறப்பு பேட்டி அளித்தார் ஆ.மாதவன்.
அவரின் வயோதிகம் அவரை தொடர்ச்சியாகப் பேச விடாமல் தடுக்கிறது. நான்கு வார்த்தைகள் சேர்ந்தார்போல் பேசினால் இடை யிடையே இருமல். மிகுந்த சிரமங்கள் இருந்தபோதிலும் அவர் உற்சாகமாகவே பேசினார்.
தமிழரான நீங்கள் கேரளாவில் எந்த சூழலில் குடியேறினீர்கள்?
என் அப்பா ஆவுடைநாயகம் பிள்ளைக்கு திருநெல்வேலி மாவட் டம் செங்கோட்டை சொந்த ஊர். என் அம்மா செல்லம்மாளுக்கு நாகர்கோவில். என் வீட்டில் என்னையும் சேர்த்து 7 பிள்ளைகள். அப்பாவுக்கு நடத்துநர் பணி. அப்போது வசதி, வாய்ப்பு எதுவும் இல்லை. பிழைப்புக்காக மலையாளக் கரை ஓரம் ஒதுங்கினர். நான் பள்ளிப் படிப்பில் பத்தாம் வகுப்பைகூட தாண்டாதவன். வாழ் வியல் ஓட்டத்துக்காக பாத்திரக் கடை வைத்தோம்.
மலையாள மொழிச் சூழலில் வளர்ந்து, தமிழ் இலக்கியத் துறை யில் வெற்றி பெற அடித்தளம் இட்டது எது?
வீட்டில் பள்ளிக் காலத்தில் மலையாள மொழி கற்றால்தான் கேரளத்தில் அரசு வேலை கிடைக் கும் என மலையாள வழிக் கல்வி யில் சேர்த்துவிட்டனர். அதே நேரத்தில் வீட்டில் தமிழில்தான் பேசு வோம். தமிழ் புத்தகங்களும் வீட்டில் நிறைய உண்டு. ஒரு கட்டத் தில் அது என்னை தமிழ், மலையாள இலக்கியங்களை படிக்க வைத்தது. ரஷ்ய, பிரெஞ்சு, ஆங்கில இலக்கி யங்களின் மலையாள மொழிப் பெயர்ப்புகள் என்னை இன்னமும் உயர்த்தியது. அதே நேரத்தில் தமிழிலும் இலக்கிய செல்வங் களை தவறவிடவில்லை. மலை யாளம்தான் என்னை இலக்கிய வாதி ஆக்கியது. ஆனால் காலப்போக்கில் மலையாளத்தை விட தமிழ்தான் என் மனதில் விஞ்சி நிற்கின்றது.
மலையாள இலக்கியத்தோடு ஒப்பிடுகையில், தமிழ் இலக்கி யம் வளர்ந்துள்ளதா?
தமிழிலே முயல், ஆமையைத் தொடர்புபடுத்தி ஒரு ஓட்டப் பந்தய கதை உண்டு. முயல் அசட்டையாக தூங்கிக் கொண்டிருக்கும்போது ஆமை முந்திக் கொண்டதைப் போல மலையாளம் முந்தி நின்றாலும், நமது தமிழ் இலக்கியங்கள் எந்த சூழ்நிலையிலும் பின்தங்கவில்லை. என்னைப் பொறுத்தவரை இரு இலக்கியங்களையும் இரு கண் களாகத்தான் பார்க்கிறேன்.
இன்னொரு பக்கம் மொழி பெயர்ப்பாளராகவும் இருந்துள் ளீர்களே? எது உங்களுக்குப் பிடித்தமானது?
எனக்கு எழுதுவது ரொம்ப பிடிக்கும். மொழிபெயர்ப்பை நான் விரும்பி எடுக்கவில்லை. அது பதிப்பகத்தார் கேட்டுக் கொண்ட தால் அமைந்தது. நான் ஒரே நேரத்தில் இரு படகுகளில் கால் வைத்துப் பயணிக்க விரும் பாதவன். அதனால் மொழி பெயர்ப்புத் துறையை எனக்கான அடையாளமாகவும் நான் பார்க்க வில்லை. ஒவ்வொரு வட்டாரத் துக்கும் ஒவ்வொரு மொழி நடை இருக்கும். அந்த வகையில் பார்த் தால் மொழிபெயர்ப்பு சிரமமானது. வைக்கம் முகமது பஷீர், ஓ.வி.விஜயன், மலையாற்றூர் ராம கிருஷ்ணன் ஆகியோரின் வட்டார வழக்கை மொழிப்பெயர்ப்பது பிரயாசை (கஷ்டம்)யான விஷயம்.
விருதுக்கு உயர்த்திய இலக்கிய சுவடுகள் குறித்து?
1953-ல் இருந்தே இலக்கிய உலகில் இயங்கிக் கொண்டிருக் கிறேன். புனலும் மணலும், கிருஷ்ண பருந்து உள்ளிட்ட நாவல் கள், குறுநாவல்கள், கடைத் தெருக் கதைகள் உள்ளிட்ட சிறுகதை தொகுப்புகள் வெளிவந்துள் ளன. 2 நாவல்களை தமிழில் மொழிபெயர்ப்பும் செய்திருக்கி றேன், இப்படியெல்லாம் படைப்பா சிரியராக வெளி உலகு என்னை அறிந்திருந்தாலும், திறனாய்வு என்னும் நுட்பமான திறன் என்னுள் இருப்பதை இவ்விருது எனக்கு உணர்த்தியுள்ளது. இப்புத்தகம் வெளியாக வேண்டும் என துணை நின்ற இலக்கியத் தம்பி விஞ்ஞானி நெல்லை.சு.முத்து, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகத்தின் உதய கண்ணன் ஆகியோருக்கும் நன்றி சொல்ல வேண்டிய நேரம் இது. 1955-ல் இருந்து நான் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு மனோபாவங்களில் எழுதியவற்றின் தொகுப்பாக இந்நூல் வந்துள்ளது.
எழுத்துலகில் இளையோருக்கு நீங்கள் சொல்லும் சேதி?
புதுமை எனச் சொல்லிக் கொண்டு, புரியாத தத்துவங் களையோ, புரியாத புதிர்களையோ இலக்கியமாக படைக்க வேண்டாம். உண்மையை கலைநயத்துடன் சொல்ல முற்பட வேண்டும். இலக்கி யம் என்பது எல்லா காலத்திலும் எளிமையான கலை வடிவை தொட்டு வருவதே. அதனால் இலக் கியம் புரிந்துகொள்ளும் அனுபவ மாக, எளிமையாக இருக்க வேண்டும். அப்படி அவர்கள் இயங்க வேண்டும் என்பதே நான் சொல்ல விரும்பும் சேதி.
‘கடைத் தெருவின் கதை சொல்லி’ என விமர்சகர்கள் உங்களைச் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு அந்த கடைத் தெருவில் என்ன இருக்கின்றது?
அந்த வியாபார உலகில் பல மனித உயிர்கள் என்னை கவர்ந்த துண்டு. பண்பாடு, நாகரிகம், பழக்க வழக்கம், பேச்சு முறை, பக்தி, தந்திரம், திருட்டு வகையறாக்கள் இவ்வளவு ஏன் ஆபாசம்கூட அங்கு உண்டு. இதில் சில குறிப்பிட்ட மனித உருவங்கள் என்னில் பதியப்பட்டது உண்டு. என் கதைக் களத்தில் வரும் கதை மாந்தர் களும் இவர்கள்தான்.
ஆரம்பத்தில் திராவிட இயக்கத்தினரின் பேச்சுகளாலும், எழுத்துகளாலும் ஈர்க்கப்பட்ட நீங்கள், இப்போது அதை எப்படி பார்க்கிறீர்கள்?
ஆரம்பத்தில் அது புதிய பகுத்தறிவை எளிய மக்களிடம் பரப்பத் தோன்றிய ஒரு பெரிய இயக்கமாக இருந்தது. நல்ல தமிழ் பேச, எழுத, தெளிவான கருத்தை சொல்ல, மக்களின் மூட நம் பிக்கையை விரட்ட, பகுத்தறிவு பாதையில் பயணிக்க சுயநலமற்ற தலைவர்கள் முன்னின்று நடத்திய காலகட்டம் அது. என் இளமை காலத்தில் அது என்னை ஈர்த்தது. எளிய கல்வி கற்ற எனக்கு பல மேல்நாட்டு அறிஞர்களின் அறிமுகமும், இலக்கியத் தேடலும் அங்கிருந்து வந்ததே. அழுக்கும், அவலமும் ஏறிப்போன இந்தக் காலத்தில் அவர்கள் நடந்த பாதையில் இப்போது நடப்பது இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT