Published : 03 Dec 2015 07:31 PM
Last Updated : 03 Dec 2015 07:31 PM
புதுச்சேரியில் கனமழையால் 76 ஏரிகள் நிரம்பி வழிகின்றன. பாகூரில் அதிகளவாக 112 மி.மீ. மழை பதிவானது.பெட்ரோல், டீசல் வரத்து இல்லாததால் புதுச்சேரியில் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் வாகனங்கள் எரிபொருள் நிரப்ப குவிந்தன.
புதுச்சேரியில் தொடர்ந்து பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. வெங்கட்டா நகர், கிருஷ்ணாநகர், ரெயின்போ நகர், பாவாணர் நகர், பூமியான்பேட் உள்ளிட்ட நகர பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்திருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு முதல் மழை படிப்படியாக குறைந்தது. இன்று அதிகாலை முதல் மதியம் வரை மழை பெய்யவில்லை. இதனால் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த வெள்ளம் மெதுவாக வடியத் தொடங்கியது. ஆனாலும், இந்திராகாந்தி சிலை பகுதியில் தேங்கியிருந்த நீர் வெளியேறவில்லை. சுமார் 2 அடிக்கு மேல் மழைநீர் தேங்கிக்கிடக்கிறது. இதனால் வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றன.
பாவாணர் நகர், பூமியான்பேட்டை, நடேசன் நகர் பகுதிகளிலும் மழைநீர் வெளியேறவில்லை. சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
ரெயின்போ நகரில் சாலைகளில் இருந்த வெள்ளம் வடிந்தாலும், வீடுகளில் புகுந்த மழைநீர் வெளியேறவில்லை. இதனால் மோட்டார் மூலம் வீடுகளில் புகுந்த நீரை வெளியேற்றி கால்வாய்களில் விட்டு வருகின்றனர். மழை நின்றாலும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
மோட்டாருக்கு தட்டுப்பாடு
வீடுகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற மோட்டாரை வாடகைக்கு எடுத்து பலரும் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். இதனால் தண்ணீர் இறைக்கும் மோட்டார் வாடகைக்கு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குவிந்த வாகனங்கள்
புதுச்சேரிக்கு பெட்ரோல், டீசல் நிரப்ப பல பெட்ரோல் பங்குகளுக்கு எண்ணெய் நிறுவனங்களில் இருந்து லாரிகள் வரவில்லை. இதனால் பங்குகளில் எரிபொருள் நிரப்ப வாகனங்கள் ஏராளமாக குவிந்தன.
நிரம்பிய 76 ஏரிகள்
புதுவையில் பெய்த தொடர் கனமழையினால் ஏரி, குளம், படுகை அணைகள் நிரம்பி வழிகிறது.பெரிய ஏரிகளான பாகூர், ஊசுட்டேரி ஆகியவை நிரம்பியுள்ளன. ஊசுட்டேரிக்கு வீடூர் அணையிலிருந்து தண்ணீர் தொடர்ந்து வருகிறது. இந்த நீர் ஊசுட்டேரிக்கு செல்லாதவாறு சங்கராபரணி ஆற்றில் திருப்பிவிடப்பட்டது. இதேபோல பாகூர் ஏரிக்கும் சாத்தனூர் அணையிலிருந்து வரும் நீர் வாய்க்கால்கள் வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகூர் அருகில் உள்ள காட்டுக்குப்பம் ஏரி முழுமையாக நிரம்பி வழிந்து வருகிறது. ஏரியின் நீர் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. அதோடு அருகில் உள்ள பாக்கியலட்சுமி நகரில் உள்ள சுமார் 50 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
வங்கி ஊழியர் சம்பந்தம் என்பவர் வீட்டில் ஏரி நீர் புகுந்ததால் வீட்டிற்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களை தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர். அப்பகுதியில் உள்ள மக்கள் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதேபோல கனகன் ஏரியும் முழுமையாக நிரம்பியுள்ளது. இதனால் அப்பகுதியிலும் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழாதவாறு மழைநீரை வெளியேற்றி வருகின்றனர். புதுச்சேரியில் உள்ள 84 ஏரிகளில் இதுவரை 76 ஏரிகள் நிரம்பி வழிகின்றன.
அதிக மழை அளவு
புதுச்சேரியில் இன்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவாக பாகூரில் 112 மி.மீ. பதிவானது. பத்துக்கண்ணு பகுதியில் 80 மி.மீ, புதுச்சேரியில் 64.2 மி.மீ. பதிவாகியிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT