Published : 17 May 2021 03:15 AM
Last Updated : 17 May 2021 03:15 AM

செல்போனில் மூழ்கி கிடப்பவர்களுக்கு மத்தியில் நெல் அறுவடை பணியில் பம்பரமாக சுழலும் பள்ளி மாணவி

திருவண்ணாமலை

வந்தவாசி அருகே நெல் அறுவடை இயந்திரத்தை இயக்கி நெல் அறுவடை பணியில் பத்தாம் வகுப்பு மாணவி ஈடுபட்டுள்ளது பாராட்டை பெற்றுள்ளது.

நாட்டின் முதுகெலும்பு என கூறப்படும் விவசாயம், மெல்ல மெல்ல நசுக்கப்பட்டு வருகிறது. விவசாயத்தை மீட்டெடுக்க பட்டதாரிகள் மற்றும் இளைஞர்கள் முன்வந்த வண்ணம் உள்ளனர். அதே நேரத்தில், விவசாயிகளின் வாரிசுகள், விவசாயத்தை விட்டு விலகி செல்கின்றனர். இந்நிலைக்கு உரத்தட்டுப்பாடு, தண்ணீர் பற்றாக்குறை மற்றும் இயற்கை இடர்பாடுகள் என பல்வேறு காரணங்களை அவர்கள் கூறுகின்றனர். இவர்களுக்கு மத்தியில், குடும்பத்துக்கு தோள் கொடுக்க, களத்தில் இறங்கி பம்பரமாக சுழல்கிறார் பத்தாம் வகுப்பு மாணவி மீனா.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஆராசூர் கிராமத்தில் வசிப்பவர் விவசாயி ராமச்சந்திரன் – காளியம்மாள் தம்பதி. இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். அதில் 3-வது மகள் மீனா. இவர், தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கரோனா கட்டுப்பாடு காரணமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் உள்ள மீனா தனது பொன்னான நேரத்தை பொன் விளையும் பூமியில் விதைத்து வருகிறார். பெற்றோருக்கு உதவியாகவும், விவசாயத்தை முன்னெடுக்கும் பெண்ணாகவும் திகழ்கிறார்.

ஏர் உழுதல், நாற்று நடுதல், களையெடுத்தல், உரம் இடுதல், தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற அனைத்து விவசாயப் பணிகளை பெற்றோரிடம் கற்றுக் கொண்ட மீனாவின் எண்ணம், அறுவடை பக்கமும் திரும்பியுள்ளது.

இதையடுத்து. தந்தையின் நெல் அறுவடை இயந்திரத்தை இயக்க கற்றுக் கொண்டுள்ளார். அதன்பிறகு, அவரது குடும்பத் துக்கு சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலத்தில் விளைந்த நெற்கதிர்களை, இயந்திரத்தை இயக்கி அறுவடை செய்துள்ளார். மேலும், மற்றவர்களின் விவசாய நிலத்திலும் நெல் அறுவடை செய்து, தந்தைக்கு தோள் கொடுத் துள்ளார். இளைஞர்களுக்கு சவால் விடும் வகையில், நெல் அறுவடை இயந்திரத்தை சர்வ சாதாரமாக இயக்கி அசத்துகிறார்.

இது குறித்து மாணவி மீனா கூறும்போது, “சிறு வயதில் இருந்து எனக்கு விவசாயத்தின் மீது அதீத ஈடுபாடு உண்டு. தந்தையுடன் நிலத்துக்கு சென்று விவசாயப் பணியை கற்றுக் கொண்டேன்.

தற்போது, கரோனா ஊரடங்குகாரணமாக பள்ளிக்கு செல்ல வில்லை. வீட்டில் இருந்து கொண்டு நேரத்தை வீணாக்காமல், நெல் அறுவடை இயந்திரத்தை கற்றுக் கொண்டேன். அதனை இயக்கி தற்போது நெல் அறுவடை செய்து வருகிறேன். இதன்மூலம் எனது தந்தைக்கும் குடும்பத்துக்கும் உதவியாக உள்ளேன். வீட்டில் இருந்தால் செல்போன், டிவி பார்க்க நேரிடும். அதனால் என்ன பயன்?. விவசாயத்தில் ஈடுபட்டால், எதிர்காலத்தில் மன உறுதியுடன் எதிர் நீச்சல் போட முடியும்” என்றார். மாணவியின் முயற்சியை விவசாயிகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x