Published : 16 May 2021 08:53 PM
Last Updated : 16 May 2021 08:53 PM
கரோனா வார்டுகளில் மக்களுக்கு வழிகாட்டுவதற்காகவும், மருத்துவப் பணியாளர்களின் மன உளைச்சலை போக்கவும், தமிழகத்தில் முதன்முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வருவோர், நோயாளிகள் மற்றும் அவர்களோடு இருப்பவர்களுக்கு உதவி செய்வதற்காக விருப்பம் உள்ளோரை தன்னார்வலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த என்சிசி, என்எஸ்எஸ், சாரண-சாரணியர்கள் மற்றும் இளைஞர்களை தன்னார்வலர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 60 தன்னார்வலர்களின் பணி இன்று (மே 16) தொடங்கி வைக்கப்பட்டது. ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசுகையில், "கரோனா தடுப்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ள தன்னார்வலர்கள், நோயாளிகள் மற்றும் அவர்களோடு வருவோருக்கு அச்சத்தைப் போக்க வேண்டும்" என்றார்.
சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசுகையில், "தமிழகம் முழுவதும் என்எஸ்எஸ், என்சிசி பிரிவில் 4 லட்சம் பேர் உள்ளனர். முதல்கட்டமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 3 ஷிப்ட்டாக பணிபுரிவர். மருத்துவமனைக்கு வருவோரிடம் கனிவாக பேசுவது, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கச் செய்வது, கரோனா நோயாளிகள், உடனிருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வர்.
இவர்கள் மூலம் ஏற்கெனவே பணியில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணிச்சுமை குறைவதோடு, மன உளைச்சலும் போக்கப்படும். இதைத்தொடர்ந்து, இத்திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது" என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், சட்டப்பேரவை உறுப்பினர் வை.முத்துராஜா, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.பூவதி, மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், மாநில நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT