Published : 16 May 2021 08:37 PM
Last Updated : 16 May 2021 08:37 PM
வாணியம்பாடி அருகேயுள்ள நியாய விலைக்கடையில் கரோனா நிவாரண நிதியை வழங்க சென்ற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரை திமுகவினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் புல்லூர் பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் கரோனா நிவாரண நிதியுதவியான 2,000 ரூபாயை வழங்குவதற்காக, வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் (அதிமுக) இன்று (மே 16) சென்றார்.
அப்போது, அங்கு வந்த திமுகவினர், அவரை நிவாரண நிதியுதவி வழங்கக்கூடாது எனக்கூறி தடுத்து நிறுத்தியதால், இரு கட்சியினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
திமுக நிர்வாகிகளில் ஒருவர், "உங்கள் ஆட்சியில் நீங்கள் வழங்கினீர்கள், இது எங்கள் ஆட்சி, நாங்கள் தான் வழங்குவோம்" என, எம்எல்ஏ செந்தில்குமாரிடம் கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அங்கிருந்த அதிமுக தொண்டர் ஒருவர், இது "மு.க.ஸ்டாலின் பணம் இல்லை, இது பொது மக்களின் வரிப்பணம்" என்று சொன்னதால், இரு கட்சியினரிடையே கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது.
அப்போது, திமுகவினர் இடையே பேசிய அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார், நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிதிநிதி என்பதால், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிதி உதவி வழங்க வந்துள்ளேன் எனக்கூறினார்.
இருப்பினும், திமுகவினர் தொடர்ந்து வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டதால், கரோனா நிவாரண நிதியை வழங்குவதை பாதியில் நிறுத்திவிட்டு, அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதேபோல், வாணியம்பாடியில் மற்றொரு நியாய விலைக்கடையில் அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார், கரோனா நிவாரண நிதி வழங்கிவிட்டு சென்ற பிறகு அங்கு சென்ற ஜோலார்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தேவராஜ், "நாங்கள் (திமுகவினர்) வருவதற்குள் அதிமுக எம்எல்ஏவை வைத்து எப்படி நிவாரணத்தொகை வழங்கலாம்? நான் ஜோலார்பேட்டை தொகுதிக்கு மட்டும் அல்ல, 4 தொகுதிகளுக்கும் நான் தான் மாவட்டச்செயலாளர். எனவே, என் தலைமையில் தான் இனி நிவாரணத் தொகை வழங்க வேண்டும்" என, அரசு அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசும் காணொலி காட்சி சமூக வளைதலங்களில் பரவி இன்று வைரல் ஆனது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT