Last Updated : 16 May, 2021 07:13 PM

 

Published : 16 May 2021 07:13 PM
Last Updated : 16 May 2021 07:13 PM

சென்னை, நெல்லையை தொடர்ந்து திருப்பத்தூரிலும் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் அருகே ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் சோதனை ஓட்டத்தை ஆட்சியர் சிவன் அருள் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

சென்னை, நெல்லையை தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் சோதனை ஓட்டத்தை ஆட்சியர் சிவன் அருள் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மாநிலம் முழுவதும் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்தி, சுகாதாரப்பணிகளை மேம்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது.

நோய் பரவலை குறைக்க அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் கிருமிநாசினி தெளித்தல், தூய்மைப்பணி, கரோனா பரிசோதனை, தடுப்பூசி செலுத்துவதை அதிகரித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நெரிசல் மிகுந்த சாலைகள், ஆட்கள் செல்ல முடியாத பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க சென்னை அண்ணா பல்கலைக்கழக வல்லுநர் குழுவினர், வான் வழியாக பறந்து கிருமி நாசினி தெளிக்க பிரத்யேகமான ட்ரோன்களை தயாரித்தனர்.

இதைதொடர்ந்து, முதல்கட்டமாக சென்னை மாநகராட்சியிலும், அதை தொடர்ந்து நெல்லையிலும் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த 2 மாவட்டங்களை தொடர்ந்து, தற்போது திருப்பத்தூர் மாவட்டத்திலும் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் சோதனை ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் இன்று (மே 16) தொடங்கி வைத்தார்.

இது குறித்து, நகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 13 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. உயிரிழப்பு எண்ணிக்கை 220-ஐ நெருங்கி வருகிறது.

நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 2,255 பேர், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற 18 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, 2,600 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முழு ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டாலும், நோய் பரவல் குறையாமல் உள்ளது. திருப்பத்தூர் நகராட்சிப் பகுதிகளில் நோய் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 1, 2, 4, 27, 28 மற்றும் 29-வது வார்டு, இரட்டைமலை சீனிவாசன் தெரு, புதுப்பேட்டைச்சாலை, தமிழ்நாடு வீட்டு வசதிவாரியம் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் நோய் தொற்று அதிகமாக காணப்படுகிறது.

நோய் பரவல் அதிகமாக காணப்படும் பகுதிகளில் நோய் தடுப்புப்பணிகள் தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டார். நகராட்சிக்கு உட்பட்ட ஒரு சில பகுதிகள் குறுகியதாகவும்,நெரிசல் மிகுந்த பகுதியாக இருப்பதால் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்க முடிவு செய்யப்பட்டது.

தனியார் நிறுவன பங்களிப்புடன் திருப்பத்தூர் நகராட்சி முழுவதும் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெட்ரோல் மூலம் இயங்கும் ட்ரோன்கள் கொண்டு வரப்பட்டு, அதில் 12 லிட்டர் கிருமி நாசினி அடங்கிய சிறிய டேங்க் இணைக்கப்பட்டு, மேலே பறந்து சென்று கிருமிநாசினி தெளிக்க இன்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து, நாளை (மே.17) முதல் 3 ட்ரோன்கள் மூலம் நகராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சாலை வழியாக வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்க ஏறத்தாழ 1 மணி நேரம் ஆகிறது. அதுவே ட்ரோன்கள் மூலம் 3 முதல் 5 நிமிடங்கள் ஆவதால், குறைந்த நேரத்தில் அதிக இடங்களில் கிருமி நாசினி தெளிக்க முடியும் என்பதால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்து வரும் 2 வாரங்களில் நகராட்சி முழுவதும் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி அனைத்து வார்டுகளிலும் தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, பிற நகராட்சிப்பகுதிகளிலும் ட்ரோன்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்க ஆலோசனை நடத்தப்படும்" என்றனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், நகராட்சி சுகதாார ஆய்வாளர் விவேகானந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x