Published : 16 May 2021 05:37 PM
Last Updated : 16 May 2021 05:37 PM
ராணிப்பேட்டையில் மாரடைப்பால் தந்தை உயிரிழந்த தகவலை அறிந்த மகள் அதிர்ச்சியில் மரணமடைந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், காரை நேரு நகரைச் சேர்ந்தவர் சம்பத் (63). ராணிப்பேட்டை அருகேயுள்ள தோல் தொழிற்சாலையில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வுப்பெற்றவர். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள். இதில் மூத்த மகள் ரேணுகாதேவி (35), திருமணமாகி தன் தந்தையின் வீட்டில் இருந்தபடி தோல் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், வயது மூப்பு காரணமாக, சம்பத் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்டு சுவாசப்பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த சம்பத்துக்கு நேற்றிரவு (மே 15) மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது.
உடனே, அவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த சம்பத் இன்று (மே 16) காலை உயிரிழந்தார். இந்த தகவல் வீட்டில் இருந்த ரேணுகாதேவிக்கு உறவினர்கள் தெரிவித்தனர்.
இதைகேட்டதும், கூச்சலிட்டபடி அதிர்ச்சியில் மயங்கி விழுந்த ரேணுகாதேவி மயக்கமடைந்தார். உடனே, அவர் அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரேணுகாதேவி, நெஞ்சுவலி காரணமாக, ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தந்தை உயிரிழந்த செய்தியை கேட்டதும் மகளும் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, 2 பேரின் உடல்களுக்கும் உறவினர்கள் இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT