Published : 29 Jun 2014 09:35 AM
Last Updated : 29 Jun 2014 09:35 AM
பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் 5 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து திங்கள்கிழமை காலை விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 49 மணி நேர கவுன்ட் டவுன் சனிக்கிழமை காலை தொடங்கியது.
5 செயற்கைக் கோள்கள்
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ மையத்தில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட் நாளை (திங்கள்கிழமை) காலை 9.52 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது. பூமியைக் கண்காணிக்கும் ஸ்பாட்-7 (பிரான்ஸ்) செயற்கைக்கோள், கடல்வழிப் போக்குவரத்தை கண்காணிக்கும் ஐசாட் (ஜெர்மனி), ஜிபிஎஸ் அமைப்புக்கு உதவும் என்எல்எஸ்7.1, என்எல்எஸ்7.2 (கனடா) என இரண்டு செயற்கைக் கோள்கள், சென்சார் கருவியுடன் கூடிய வெலாக்ஸ்-1 (சிங்கப்பூர்) என மொத்தம் 5 செயற்கைக் கோள்கள் இதன்மூலம் விண்ணில் செலுத்தப்படுகின்றன.
இதில் ஸ்பாட்-7 செயற்கைக்கோள் மட்டும் 714 கிலோ எடை கொண்ட பெரிய செயற்கைக்கோளாகும். ஐசாட் 14 கிலோ, என்எல்எஸ் செயற்கைக் கோள்கள் தலா 15 கிலோ, வெலாக்ஸ் 7 கிலோ எடை கொண்ட சிறிய செயற்கைக் கோள்கள். பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இதுவரை வெளிநாடுகளைச் சேர்ந்த 35 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 49 மணிநேர கவுன்ட் டவுன் சனிக்கிழமை காலை 8.52 மணிக்கு தொடங்கியது. ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணிகளும் முழுவீச்சில் நடந்தன.
பிரதமர் மோடி இன்று வருகை
ஸ்ரீஹரிகோட்டாவில் திங்கள்கிழமை ராக்கெட் ஏவப்படும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். இதற்காக அவர், டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று பகல் 1 மணிக்கு புறப்பட்டு மாலை 3.30 மணி அளவில் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வருகிறார். பின்னர் குண்டு துளைக்காத ஹெலிகாப்டரில் ஸ்ரீஹரிகோட்டா செல்கிறார். ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, சென்னை வந்து, உடனடியாக டெல்லி திரும்புகிறார். பிரதமர் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. பிரதமராக பதவியேற்ற பிறகு, முதல் முறையாக சென்னை வருகிறார் மோடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT