Published : 16 May 2021 04:05 PM
Last Updated : 16 May 2021 04:05 PM
சக மனிதரைக் காலில் விழவைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா? என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கரோனா காலத்தில் திருவிழாவை நடத்தும் விவகாரத்தில், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒட்டனேந்தல் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்தார்கள் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த முதியவர்கள் 3 பேர் காலில் விழுவது போன்ற புகைப்படங்களும், வீடியோவும் நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்நிலையில், ஆட்சியர் அண்ணாதுரை ஒட்டனேந்தல் கிராமத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டார். அப்போது எஸ்.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையடுத்து, ஒட்டனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் முருகன், பாண்டுரங்கன் மகன் லோகநாதன், ராமசாமி மகன் குமரன், ஆதிகேசவன் உள்ளிட்ட 54 பேர் மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காலனி தரப்பைச் சேர்ந்த ராமசாமி மகன் குமரன் கொடுத்த புகாரின் பேரில், அதே கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ரமேஷ், கருணாநிதி மகன் கோகுல்ராஜ், ராமசாமி மகன் முத்துகுமரன், ராமலிங்கம் மகன் சீதாராமன், கலியமூர்த்தி மகன் ராமசந்திரன், முருகன் மகன் முத்துராமன், கோவிந்தராஜ் மகன் சூர்யா, இளையபெருமாள் மகன் அய்யப்பன் ஆகியோர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உட்பட 6 பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கோகுல்ராஜ், சீதாராமன் ஆகிய 2 பேரைக் கைது செய்துள்ளனர். மற்றவர்கள் தலைமறைவாகி விட்டனர்.
இது தொடர்பாக, கமல் இன்று (மே 16) தன் ட்விட்டர் பக்கத்தில், "இந்தியர் யாவரும் என் உடன்பிறந்தோர் என்று உறுதிமொழி எடுக்கும், குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று மனப்பாடப் பாட்டு கற்பிக்கும் தமிழகத்துக்குள்தான் விழுப்புரம் ஒட்டனேந்தல் இருக்கிறதா?
திருவிழா கொண்டாடியதற்காக சக மனிதரைக் காலில் விழவைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா? இம்முறையே இறுதி முறையாக இருக்கட்டும். அரசின் தலையீடு வலுவானதாக அமையட்டும்" என பதிவிட்டுள்ளார்.
இந்தியர் யாவரும் என் உடன்பிறந்தோர் என்று உறுதிமொழி எடுக்கும், குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று மனப்பாடப் பாட்டு கற்பிக்கும் தமிழகத்துக்குள்தான் விழுப்புரம் ஒட்டனேந்தல் இருக்கிறதா? (1/2)
— Kamal Haasan (@ikamalhaasan) May 16, 2021
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT