Published : 16 May 2021 03:31 PM
Last Updated : 16 May 2021 03:31 PM
ரெம்டெசிவிர் விற்பனை நிலையங்கள் கரோனா பரவல் மையங்களாகிவிடக் கூடாது என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (மே 16) வெளியிட்ட அறிக்கை:
"சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக காத்துக் கிடக்கும் மக்களைப் பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. உணவு, தண்ணீர் இன்றி பல மணி நேரம் காத்திருந்தாலும் கூட மருந்து கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். அதுமட்டுமின்றி, கட்டுப்பாடுகள் இல்லாமல் மக்கள் அதிகம் கூடுவதால் அங்கு கரோனா பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு தினமும் 7,000 டோஸ்கள் மட்டும் தான் ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அரசு மருத்துவமனைகளின் தேவைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது போக மீதமுள்ள மருந்தில், ஒருவருக்கு 6 டோஸ்கள் வீதம் தினமும் 300 பேருக்கு 1,800 டோஸ்கள் நேரு உள்விளையாட்டரங்கில் விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய நகரங்களில் ஒருவருக்கு 6 டோஸ் வீதம் தலா 100 பேருக்கு 600 டோஸ்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சென்னையில் 300 பேருக்கு மட்டும் தான் மருந்து வழங்கப்படும் என்ற நிலையில், பெருந்தொற்று காலத்தில் 3,000-க்கும் அதிகமானவர்களை கூடச் செய்வதும், தினமும் அவர்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்களை ஏமாற்றத்துடன் திருப்பி அனுப்புவதும் எந்த வகையிலும் நியாயமல்ல; நிர்வாகத் திறனுக்கும் அழகல்ல.
ரெம்டெசிவிர் வாங்குவதற்காக ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடும் போது கரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதிலும் குறிப்பாக, ரெம்டெசிவிர் வாங்குவதற்காக குவிந்துள்ள அனைவருமே கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் ஆவர். அவர்களில் பலருக்கு அறிகுறிகள் இல்லாமல் கூட கரோனா தொற்று இருக்கலாம்.
இந்த உண்மைகள் எல்லாம் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யும் மருத்துவத்துறைக்கு தெரியாமல் இருக்காது. ஆனாலும், ரெம்டெசிவிர் விற்பனைக்கு மாற்று வழிகளை ஆராயாமல், ஒரே இடத்தில் இவ்வளவு கூட்டத்தைக் கூட்டி, கரோனா பரவுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது ஏன்? என்பது தான் புரியவில்லை.
ரெம்டெசிவிர் விற்பனை தொடர்பான இரு விஷயங்களை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். முதலாவது ரெம்டெசிவிர் மருந்து கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட வேண்டுமா? என்பது பற்றியது. ரெம்டெசிவிர் மருந்து கரோனாவை குணப்படுத்தாது; ரெம்டெசிவிர் உயிர் காக்கும் மருந்து அல்ல; கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை மோசமடைவதை ரெம்டெசிவிர் தடுக்காது என்பது தான் மருத்துவ வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
உலகம் முழுவதும் 30 நாடுகளில் உள்ள 500 மருத்துவமனைகளில் 12,000 கரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தை செலுத்தி மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வில் (Solidarity Clinical Trial) இந்த உண்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் கரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட வேண்டுமா? அவ்வாறு செலுத்தப்பட வேண்டும் என்றால், எந்த நிலையில் உள்ளவர்களுக்கு செலுத்த வேண்டும் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். இது குறித்த தெளிவான வழிகாட்டுதல்களை கரோனாவுக்கு மருத்துவம் அளிக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மருத்துவத்துறை வழங்க வேண்டும்.
கரோனா பாதித்த நோயாளிகளில் ஏற்கெனவே ஸ்டீராய்ட் பயன்படுத்தியவர்களுக்கும், பாதிக்கப்பட்ட முதல் 5 நாட்களில் ஆக்சிஜன் அளவு குறைந்தவர்களுக்கும் ரெம்டெசிவிர் மருந்து வழங்கலாம் என்றும், அதன்படி மருந்து தேவைப்படும் நோயாளிகளின் அளவு மொத்த நோயாளிகளில் 10 முதல் 15 விழுக்காடு மட்டுமே இருக்கும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அரசு மருத்துவமனைகளைப் பொறுத்தவரை தேவைப்படுவோருக்கு மட்டும் தான் ரெம்டெசிவிர் செலுத்தப்படுகிறது. தனியார் மருத்துவனைகளில் தான் ரெம்டெசிவிர் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இது முறைப்படுத்தப்பட வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளில் எந்தெந்த நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் தேவைப்படுகிறதோ, அவர்களுக்கான மருந்தை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளே அந்தந்த மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தில் பெற்றுக் கொள்வது தான் சரியானதாக இருக்கும். அவ்வாறு செய்வதன் மூலம் தேவையின்றி சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் கூட்டம் கூடுவதை நிச்சயமாக தவிர்க்க முடியும்.
ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்காக இப்போது கடைபிடிக்கப்படும் அணுகுமுறை பயனற்றதாகும். ஏனெனில், ரெம்டெசிவிர் மருந்தை கரோனா நோய் பாதிப்பு ஏற்பட்ட 5 நாட்களுக்கு முன்பாகக் கொடுத்தால் தான் ஏதேனும் கொஞ்சம் பயன் கிடைக்கும்.
ஆனால், தனியார் மருத்துவமனைகளில் பரிந்துரைக்கப்பட்ட பிறகு சென்னை உள்ளிட்ட ஏதேனும் நகரத்துக்குச் சென்று 6 நாட்கள் வரை காத்திருந்து மருந்தை வாங்கிச் செல்வதற்குள் சம்பந்தப்பட்ட நோயாளிக்கு மருந்து செலுத்துவதற்கான அவகாசம் முடிவடைந்து விடும்.
அதேநேரத்தில், ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக 6 நாட்கள் பெருங்கூட்டத்தில் போராடிய நபருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்படும் ஆபத்து அதிகமுள்ளது.
எனவே, ரெம்டெசிவிர் விற்பனைக்கான முறையை அரசு மாற்ற வேண்டும். தமிழ்நாட்டுக்கான ஒதுக்கீட்டை இப்போதுள்ள 7,000-லிருந்து 20 ஆயிரமாக உயர்த்திப் பெற வேண்டும். எந்தெந்த நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் தேவையோ, அந்தந்த நோயாளிகளுக்கு அவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனை வழியாகவே மருந்தை வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்".
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT