Published : 16 May 2021 02:57 PM
Last Updated : 16 May 2021 02:57 PM
கரோனா 2-ம் அலை பரவல் தீவிரம் அடைந்து வரும் நிலையில் மதுரை முழுவதும் பொதுமக்களுக்குக் கபசுரக் குடிநீர் விநியோகத்தை செஞ்சிலுவை சங்கம் தொடங்கியுள்ளது.
கரோனா முதல் அலையின்போது பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முகக் கவசம் வழங்குதல், கரோனா தொற்றால் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செஞ்சிலுவை சங்கம் மேற்கொண்டது. இதற்காக மதுரை மாவட்ட ஆட்சியர் செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளுக்கு விருது வழங்கிப் பாராட்டினார்.
இந்நிலையில் மதுரையில் கரோனா 2-வது அலைப் பரவல் அதிகமாக உள்ளது. தினமும் ஆயிரம் பேர் வரை கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதையடுத்து மீண்டும் பொதுமக்களுக்குக் கபசுரக் குடிநீர் விநியோகம் செய்யும் பணியை செஞ்சிலுவை சங்கம் தொடங்கியுள்ளது.
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மதுரை மாவட்டக் கிளை சார்பில் மதுரை சர்வேயர் காலனி, பரசுராம்பட்டி கண்மாய், அய்யனார் கோவில் பகுதிகளில் செஞ்சிலுவை சங்கம் சார்பில் கபசுரக் குடிநீர், மருந்துப் பெட்டகம், முகக் கவசம் வழங்கும் பணியை தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்.
பின்னர் மதுரை மாவட்ட செஞ்சிலுவை சங்கச் செயலர் கோபாலகிருஷ்ணன், பேரிடர் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், உறுப்பினர்கள் தினேஷ், ராஜபாண்டியன் சரவணன், மூகாம்பிகை மற்றும் மதுரை பார்க் டவுன் லயன்ஸ் கிளப் தலைவர் முத்துக்குமார், செயலர் பாண்டியராஜன், பொருளாளர் ரமேஷ்பாபு உள்ளிட்டோர் பொதுமக்களுக்குக் கபசுரக் குடிநீர் வழங்கினர்.
மதுரை மாநகராட்சிப் பகுதி முழுவதும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், மருந்துப் பெட்டகம், முகக் கவசம் வழங்கப்படும் என செஞ்சிலுவை சங்கச் செயலர் கோபாலகிருஷ்ணன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT