Last Updated : 15 Dec, 2015 03:16 PM

 

Published : 15 Dec 2015 03:16 PM
Last Updated : 15 Dec 2015 03:16 PM

தென் மாவட்ட மதிமுக செயலாளர்கள் 4 பேர் திமுகவில் இணைந்ததன் பின்னணி

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மதிமுக செயலாளர்கள் 4 பேர் நேற்று திமுகவில் இணைந்தது தென்மாவட்ட அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

2016 சட்டப் பேரவை தேர்தலை தமிழகம் எதிர்கொள்ள இருக்கும் நிலையில் மதிமுகவிலிருந்து பல்வேறு நிர்வாகிகள் விலகுவதும், புதிய நிர்வாகிகளை நியமிப்பதும் கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வருகிறது. கட்சியின் பொருளாளர் மாசிலாமணி, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் மதிமுகவிலிருந்து விலகினர். இவ்வாறு கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகியது அக்கட்சிக்குள் சலசலப்பை உருவாக்கியிருந்தது.

வைகோவின் சொந்த மாவட்டமான திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து மாநகர் மாவட்ட செயலாளர் பெருமாள், புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோயல், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் தில்லை செல்வம் ஆகியோர் அக் கட்சியிலிருந்து விலகி திமுகவில் நேற்று மாலையில் இணைந்துள்ளனர். தென்மாவட்ட அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி தமிழக அரசியல் வட்டாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்கள் 4 பேரும் ஒன்றுசேர கட்சியிலிருந்து விலக காரணம் என்ன என்ற கேள்வி அரசியல் வட் டாரத்தில் எழுப்பப்பட்டு வருகிறது.

மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை ஒன்றிணைத்து மக்கள் நலகூட்டி யகத்தை 3-வது அணியாக உருவாக்கியிருக்கும் மதிமுக பொதுசெயலாளர் வைகோவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தே மதிமுகவில் இருந்து இவர்கள் விலகியதாக தெரிகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி திருவள்ளூரில் நடைபெற்ற மதிமுக முப்பெரும் விழாவில், அதிமுகவை வீழ்த்த எதிரியுடன் கைகோர்ப்பேன் என்று வைகோ அறிவித்தார். இதனால் 2016 சட்டப் பேரவை தேர்தலில் திமுகவுடன், மதிமுக கூட்டணி அமைக்கும் என்று மதிமுகவினரால் எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பாரப்புக்கு மாறாக மக்கள் நல கூட்டியகத்தை வைகோ உருவாக்கியது அக் கட்சியினருக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தது. 3-வது அணி அமைத்து போட்டியிட்டால் அது அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்றும் இந்த முடிவை மாற்ற வேண்டும் என்றும் வைகோவிடம் நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும், அதை வைகோ ஏற்கவில்லை என்றும் தெரிகிறது. மக்கள் நலகூட்டியக்கத்தை உருவாக்கும் முடிவை வைகோ தன்னிச்சையாக எடுத்ததாகவும் நிர்வாகிகள் குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள்.

இந்த பின்னணியிலேயே மதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகினர். அதன் தொடர்ச்சியாகவே இவர்கள் 4 பேரும் ஒரேநேரத்தில் மதிமு கவிலிருந்து விலகி, திமுகவில் இணைந்திருக்கிறார்கள். இத்த னைக்கும் இவர்கள் அனைவரும் வைகோவின் தீவிர விசுவாசிகள். வைகோவின் நிகழ்ச்சிகள், கட்சியின் போராட்டங்களை எல்லாம் நடத்தியிருந்தவர்கள். நிகழ்ச்சிகளுக்கான செலவுகளை யும் பொறுப்பேற்றிருந்தவர்கள்.

மதிமுகவிலிருந்து விலகுவதற்கான காரணம் குறித்து இவர்கள் கூறும்போது, மதிமுகவில் கட்சி நலனை மட்டுமே கொண்டு உழைத்துவந்தோம். ஆனால் ஒவ்வொரு தேர்தலின்போதும் வைகோ சரியான முடிவெடுக்க தவறிவிடுகிறார். கடந்த சட்டப் பேரவை தேர்தலில் அதிமுகவுடன், மதிமுக கூட்டணி அமைப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அதிமுகவால் அவமானப்படுத்தப்பட்டதாக கூறி தேர்தலில் போட்டியிடாமல் மதிமுக வெளியேறியது. கடந்த 5 ஆண்டுகளாக காத்திருந்தோம். வரும் சட்டப் பேரவை தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி அமைப்பதாக இருந்த நிலையில் தற்போது மக்கள் நலகூட்டியக்கத்தை வைகோ உருவாக்கியிருக்கிறார். இது கடந்த தேர்தலில் மதிமுகவை அவமானப்படுத்திய அதிமுகவுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்பதால் மதிமுகவிலிருந்து விலகினோம் என்று தெரிவித்தனர்.

ஆனால் இவர்கள் மட்டுமே கட்சியிலிருந்து விலகியிருக்கிறார்கள். மதிமுக தொண்டர்கள் யாரும் இவர்கள் பின்னால் செல்லவில்லை. எனவே இவர்கள் விலகியதால் கட்சிக்கு எந்த பின்னடைவும் இல்லை என்று திருநெல்வேலி மாவட்ட மதிமுக நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x