Last Updated : 15 May, 2021 08:50 PM

 

Published : 15 May 2021 08:50 PM
Last Updated : 15 May 2021 08:50 PM

கரோனா; கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் ரூ.10 லட்சம் நிதியுதவி: தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்க கோரிக்கை

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின் சார்பில், முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர்களிடம் வழங்கிய ஒப்பந்ததாரர்கள்.  

கோவை

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் சார்பில், முதல்வரின் நிவாரண நிதிக்கு, ரூ.10 லட்சத்துக்கான காசோலை அமைச்சர்களிடம் வழங்கப்பட்டது. திட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தொற்றுப் பரவலைத் தடுக்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள, முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதியளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், கோவையில் இன்று கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பது தொடர்பாக, தொழில்துறை பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில், அமைச்சர்கள் க.ராமச்சந்திரன் (வனத்துறை), அர.சக்கரபாணி (உணவு வழங்கல் துறை) ஆகியோர் தலைமை வகித்துப் பேசினர். இக்கூட்டம் முடிந்தபிறகு, முதல்வரின் நிவாரண நிதிக்கு தொழில் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நிவாரணத் தொகை அளித்தனர். அப்போது, கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் உதயகுமார், பொருளாளர் அம்மாசையப்பன் ஆகியோர், முதல்வரின் நிவாரண நிதிக்காக ரூ.10 லட்சம் தொகைக்கான காசோலையை அமைச்சர்கள் க.ராமச்சந்திரன், அர.சக்கரபாணி ஆகியோரிடம் வழங்கினர்.

இது தொடர்பாகக் கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தினர் கூறும்போது, ‘‘கடந்த ஆண்டில் கரோனா முதல் அலை தாக்கத்தின்போது, கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் நலச் சங்கத்தின் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண உதவித் தொகையாக வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போதும் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் சார்பில் கரோனா தொற்று காரணமாகப் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உதவி செய்யவும், அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையில் நோயாளிகளுக்குத் தேவையான உதவிகள் செய்யவும், ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக முகக்கவசம், சானிடைசர் வழங்கவும், ரெம்டெசிவிர் மருந்து பெறத் தேவையான உதவிகள் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி, மேம்பாலம், குடிநீர்த் திட்டம் உட்படப் பல்வேறு திட்டப் பணிகளில் 1,300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். பல இடங்களில் தொழிலாளர்கள் முழு ஊரடங்கு காலத்திலும் இரவு பகலாக வேலை செய்கிறார்கள். தொற்றுப் பரவல் அதிகமாக உள்ள நிலையில் தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசியை முன்னுரிமை அடிப்படையில் விரைவாகப் போட வேண்டும் என அமைச்சர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x