Published : 15 May 2021 07:42 PM
Last Updated : 15 May 2021 07:42 PM

கரோனா பராமரிப்பு மையத்தில் மன அழுத்தத்தைப் போக்க நூலகம்; மருத்துவர், தன்னார்வ அமைப்பு இணைந்து புதிய முயற்சி 

பராமரிப்பு மையத்தில் சிகிச்சை பெறுபவர்கள் புத்தகத்தை வாசிக்கின்றனர்.  

திருவண்ணாமலை 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மன அழுத்தத்தைப் போக்க திருவண்ணாமலை, சேத்துப்பட்டு கரோனா பராமரிப்பு மையத்தில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மன அழுத்தத்தில் இருப்பது, உளவியலாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களது மன அழுத்தத்தைப் போக்க, அவர்களுடன் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. மேலும், அவர்களது சின்னசின்ன ஆசைகள் நிறைவேற்றப்படுகின்றன.

அதன்படி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மன அழுத்தத்தைப் போக்க, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் கரோனா பராமரிப்பு மையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் மணிகண்ட பிரபுவின் முயற்சியால் ‘நூலகம்‘ எனும் வாசிப்பு அரங்கம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

எதிர்மறைச் சிந்தனைகளுடன்

இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் மருத்துவர் மணிகண்ட பிரபு கூறும்போது, “சேத்துப்பட்டு சென்ட் தாமஸ் மருத்துவமனையில் உள்ள கரோனா பராமரிப்பு மையத்தில் 102 பேர் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களைப் பரிசோதனை செய்யும்போது, சோகத்துடன் இருப்பதைக் காண முடிந்தது. மேலும், வாட்ஸ் அப் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இடம்பெறும் கரோனா பற்றிய தகவல்களை அதிக அளவில் படிப்பதால் எதிர்மறையான சிந்தனைகளுடன் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மனநல மருத்துவர் புவனேஸ்வரனை வரவழைத்து, சிகிச்சை பெறுபவர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டு, அவர்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டன. அப்போது புத்தகங்களை வாசிப்பதற்கு உதவ வேண்டும் எனப் பலரும் கேட்டனர். அதன் மூலம் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களைப் பார்ப்பது தவிர்க்கப்பட்டு, மன அழுத்தமும் குறையும் எனக் கருத்து தெரிவித்தனர். அதேபோல் கேரம் மற்றும் சதுரங்கம் போன்ற விளையாட்டிலும் சிலர் ஆர்வமாக இருப்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது.

விரைவாக நலம் பெறலாம்

இதைத் தொடர்ந்து திருவண்ணாமலை அடுத்த வேடியப்பனூரில் உள்ள ‘ரேகன்போக் இந்தியா பவுண்டேஷன்’ என்ற அமைப்பின் நிறுவனர் மதனைத் தொடர்புகொண்டு, பராமரிப்பு மையத்துக்குப் புத்தகம் தேவை எனத் தெரிவித்தோம். அடுத்த ஒரு மணி நேரத்தில், 500 புத்தகங்கள் வந்து சேர்ந்தன. மேலும் டிவிஎஸ் அமைப்பு மூலமாக கேரம் போர்டு மற்றும் சதுரங்க உபகரணங்கள் பெறப்பட்டன. இதையடுத்து, மையத்திலேயே நூலகம் கட்டமைக்கப்பட்டது. இப்போது சிகிச்சை பெறுபவர்கள், நூல்களை வாசித்து வருகின்றனர். இதன் மூலம் அவர்களது மன அழுத்தம் குறைந்து விரைவாக நலம்பெற முடியும்” என்று மருத்துவர் மணிகண்ட பிரபு தெரிவித்தார்.

மேலும் புத்தகங்களை வழங்குவோம்

இதுகுறித்து ரேகன்போக் நிறுவனர் மதன் கூறும்போது, “எங்களது அமைப்பு மூலம் 7 ஆண்டுகளாக நடமாடும் நூலகம் செயல்படுகிறது. 14 ஆயிரம் புத்தகங்களைக் கொண்டு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்கப்படுத்தி வருகிறோம்.

வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்ட பிரபு கேட்டுக்கொண்டதன் பேரில், சேத்துப்பட்டில் உள்ள பராமரிப்பு மையத்துக்கு சிறுகதைகள், நாவல்கள், அறிவியல், உடல் ஆரோக்கியம், தத்துவம் என 500 புத்தகங்களைக் கொடுத்துள்ளோம். பிற மருத்துவமனைகளுக்கும் புத்தகங்களை வழங்கத் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x