Published : 15 May 2021 07:01 PM
Last Updated : 15 May 2021 07:01 PM
ஓசூரில் விதிமுறைகளை மீறி இயங்கிய மால், தேநீர்க் கடைகள் மூடப்பட்ட நிலையில், அவற்றுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஓசூர் - தளி சாலையில் கூட்ட நெரிசலுடன் இயங்கி வந்த நடைபாதைக் காய்கறிக் கடைகள் முழுவதுமாக அகற்றப்பட்டன.
தமிழகத்தில் கடந்த 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மளிகை, காய்கறி, தேநீர்க் கடை உள்ளிட்ட கடைகள் மட்டும் இயங்கும் என்ற அறிவிப்புடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இதில் மாற்றம் செய்யப்பட்டு காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறிக் கடைகள் இயங்கும் என்ற அரசின் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்தப் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை முன்னிட்டு ஓசூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மகாத்மா காந்தி சாலை, நேதாஜி சாலை, ஏரித்தெரு, ராயக்கோட்டை சாலை, தேன்கனிக்கோட்டை சாலை உள்ளிட்ட பரபரப்பு மிகுந்த அனைத்துச் சாலைகளிலும் காலை 10 மணிக்குப் பிறகு மளிகை, காய்கறி உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. தேநீர்க் கடைகளும் முழுவதுமாக மூடப்பட்டிருந்தன. நகரச் சாலைகளில் வாகன இயக்கம், மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
இந்தச் சாலைகளில் பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறந்திருந்தன. ஓசூர் நகரப் பகுதியின் பிரதான சாலை சந்திப்புகளில் காலை 10 மணிக்கு மேல் தடுப்புகளை வைத்து அடைத்த போலீஸார், நகரச் சாலைகளில் அநாவசியமாக நடமாடிய பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளைத் தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து அனுப்பினர். நகரின் பிரதான சாலை சந்திப்புகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதுகுறித்து ஓசூர் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் கூறும்போது, ''ஓசூர் மாநகராட்சியில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பகுதியில் புதிய கட்டுப்பாடுகளை மீறித் திறக்கப்பட்டிருந்த தேநீர்க் கடைகள் உட்பட 10 கடைகள் மூடப்பட்டு ரூ.5 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இன்று ஓசூர் - தளி சாலை ராம்நாயக்கன் ஏரிக்கரை மற்றும் சந்திராம்புதி (தர்கா ஏரி) ஏரி அருகே கூட்ட நெரிசலுடன் இயங்கி வந்த நடைபாதைக் காய்கறிக் கடைகள் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளன.
மேலும் ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விதிமுறைகளை மீறித் திறக்கப்பட்ட டி.மார்ட் என்கிற மால் பூட்டப்பட்டு நிர்வாகத்திடம் ரூ.5 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும், இதேபோலத் திறந்தால் சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டது'' என்று செந்தில் முருகன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT