Published : 15 May 2021 03:09 PM
Last Updated : 15 May 2021 03:09 PM
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாகக் கடந்த ஆண்டு 8 மாதங்கள் பூட்டிக் கிடந்த காந்தி மார்க்கெட், மீண்டும் திறக்கப்பட்டு 5 மாதங்கள் ஆன நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மீண்டும் நாளை (மே.16) முதல் மூடப்படுகிறது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாகக் கடந்த ஆண்டு மார்ச் 30-ம் தேதி காந்தி மார்க்கெட் பூட்டப்பட்டது. அந்த நேரத்தில் காந்தி மார்க்கெட்டை நிரந்தரமாக மூடி, கள்ளிக்குடியில் கட்டப்பட்டுள்ள மத்திய வணிக வளாகத்தை முழுப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் காந்தி மார்க்கெட்டைத் திறக்க இடைக்காலத் தடை விதித்தது.
பின்னர், காந்தி மார்க்கெட்டைத் தற்காலிகமாகத் திறக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து, சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு 2020, நவ.27-ம் தேதி காந்தி மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டது.
இதனிடையே தமிழ்நாட்டில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்ததால், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் காய்கனி வணிக வளாகங்களில் ஏப்.10-ம் தேதி முதல் சில்லறை வியாபாரத்துக்கு அரசு தடை விதித்தது.
அரசின் உத்தரவையடுத்து, திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஏப்ரல் 11-ம் தேதி முதல் சில்லறை வணிகம் நடைபெறாது என்றும், சில்லறை வியாபாரிகளுக்கு ஜி கார்னர் மைதானத்தில் இடம் ஒதுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆனால், பல்வேறு காரணங்களைக் கூறி ஜி கார்னருக்கு வியாபாரிகள் செல்லவில்லை. மாறாக, காந்தி மார்க்கெட்டிலேயே தொடர்ந்து மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் நடைபெற்று வந்தது.
இதனிடையே, திருச்சி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததை அடுத்து, காந்தி மார்க்கெட் மே 7-ம் தேதி முதல் மூடப்படும் என்றும், அனைத்து வியாபாரிகளும் ஜி கார்னர் மைதானத்துக்குச் செல்லுமாறும் மாநகராட்சி அலுவலர்கள் அறிவுறுத்தினர். அப்போதும் வழக்கம்போல் வியாபாரிகள் அங்கு செல்ல மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1,224 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,328 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் காந்தி மார்க்கெட் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் அறிவுறுத்தியவாறு, காந்தி மார்க்கெட்டில் நாளை (மே.16) இரவு முதல் வியாபாரம் நிறுத்தப்படும் என்றும், மறு அறிவிப்பு வரும் வரை, மேல புலிவார்டு ரோடு முதல் காமராஜர் வளைவு வரையிலான சாலையின் ஒரு பகுதியில் மொத்த வியாபாரம் இரவு நேரத்திலும், மற்றொரு புறம் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை சில்லறை வியாபாரமும் நடைபெறும் என்றும், பாலக்கரை பஜார் முதல் பாலக்கரை ரவுண்டானா வரை கேரட், பீட்ரூட் போன்ற காய்கனி வியாபாரமும் நடைபெறும் எனவும் மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT