Published : 15 May 2021 02:36 PM
Last Updated : 15 May 2021 02:36 PM
கரோனா தொற்றிலிருந்து மீண்டோருக்கு புதிய நோய்த்தொற்று உருவாவதால் எச்சரிக்கையாக இருக்க சுகாதாரத் துறைச்செயலர் டாக்டர் அருண் அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் கரோனாவிலிருந்து மீண்டோருக்கு புதிய நோய்த்தொற்று உருவாவது தொடர்பாக சுகாதாரத் துறைச் செயலர் டாக்டர் அருண் இன்று கூறியதாவது:
”மியூகோர்மைகோஸிஸ் (Mucormyycosis) அல்லது கருப்பு பூஞ்சை நோய்த்தொற்று தற்போது நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில் ஒரு புதிய சவாலாக இந்த நோய்த் தொற்று உருவெடுத்துள்ளது.
இந்த கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டுள்ள நபர்களுக்கும், எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நோயாக இருந்தது.
ஆனால், தற்போது கரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்கள் இடையே இந்நோய்த் தொற்று பெருமளவிற்கு காணப்படுகின்றது. கரோனா நோய்த் தொற்றில் ஸ்டீராய்டு உட்கொண்டவர்கள், நீரிழிவு நோயாளிகள், தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை பெற்றவர்கள், நீண்டகாலம் ஆக்சிஜன் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளிகள் ஆகியோர் அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளது.
இந்நோய்த்தொற்று ஆபத்து உடையது. சரியான நேரத்தில் தக்க சிகிச்சை எடுக்காவிட்டால் இந்த கருப்பு பூஞ்சை மூக்கின் வழியாக மூளைக்குப் பரவும் வாய்ப்பு உள்ளது. இந்நோயினால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய பக்க விளைவுகள் ஏற்படலாம், இந்நோய் எச்சரிக்கை அறிகுறிகளாக தலைவலி, முகத்தில் வலி, மூக்கடைப்பு, கருப்பு நிற சளி, கண் வலி, மற்றும் மேல் இமை இறங்குதல், இரட்டைப் பார்வை, பல் வலி மற்றும் பல் ஆடுதல் மற்றும் வாய் மற்றும் மூக்கின் உள் பகுதிகளில் கரும்புள்ளிகள் ஆகியவை ஏற்படும்.
மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டால் உடனடியாக மருத்துவர் அல்லது மருத்துவமனையில் உதவியை அணுக வேண்டும். கரோனா நோய் உள்ளவர்கள் மற்றும் தொற்றில் இருந்து மீண்டவர்கள் தங்கள் நீரிழிவு அளவைத் தினமும் கண்காணித்து கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது அவசியம். நீரிழிவு அளவு அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
வீட்டிலேயே ஆக்சிஜன் உபயோகிப்பவர்கள் சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஸ்டீராய்டு மருந்துகளை அதிகமாக உட்கொள்வதை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்’’.
இவ்வாறு டாக்டர் அருண் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT