Published : 15 May 2021 01:37 PM
Last Updated : 15 May 2021 01:37 PM
கூட்டுறவு சங்கத்தை ஆய்வு செய்யவில்லை எனக் கூறி, பெண் கள அதிகாரிக்கு விதிக்கப்பட்ட ஊதிய உயர்வு நிறுத்த தண்டனையை, பதவி உயர்வு நேரத்தில் உள்நோக்கத்துடன் தண்டனை அளிக்கப்பட்டதாகக் கூறி ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக கூட்டுறவுத் துறையில் பொது விநியோக திட்டப் பிரிவில் சார் பதிவாளராகப் பணியற்றி வருபவர் வசந்தி. இவர், 2015 - 17ஆம் ஆண்டுகளில் மதுரையில் களப் பணியாளராகப் பணியாற்றியபோது, குலமங்கலம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு நடத்தவில்லை எனக் கூறி, அவருக்கு ஊதிய உயர்வை நிறுத்தி துணை பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து வசந்தி தாக்கல் செய்த வழக்கை நீதிபதி வைத்தியநாதன் விசாரித்தார். விதிகளின்படி மாதந்தோறும் இரு ஆய்வுகளும், நான்கு முறை திடீர் ஆய்வுகளும் நடத்தி வந்ததாகவும், சில கூட்டுறவு சங்கங்கள் தனக்குக் கூடுதல் பொறுப்பாக ஒதுக்கியதால் குலமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு செய்ய முடியவில்லை எனவும், பதவி உயர்வு நெருங்கிய நிலையில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
கடமையைச் செய்யத் தவறியதால்தான் ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டதாகவும், அதில் எந்த சட்டவிரோதமும் இல்லை என, தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பதவி உயர்வு பெறும் நேரத்தில் வழங்கப்பட்டுள்ள இந்த தண்டனையில் உள்நோக்கம் இருப்பதாகக் கருத வேண்டியுள்ளது எனவும், மனுதாரரால் எந்த இழப்பும் ஏற்படவில்லை எனவும் கூறி, தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், பதவி உயர்வு வழங்குவதற்கான பட்டியலில் மனுதாரரைச் சேர்த்து, பரிசீலிக்க வேண்டும் எனவும் நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT