Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM
சென்னையில் கெல்லீஸ் முதல் தரமணி வரை சுமார் 12 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணியை எல் அண்ட் டி நிறுவனம் மேற்கொள்கிறது.
சென்னையில் தற்போது இரு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. விமானநிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் வடசென்னையை இணைக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சேவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கரோனா முழு ஊரடங்கு காரணமாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், சில இடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போது இரண்டாவது கட்டமாக மாதவரம்-சிறுசேரி, மாதவரம்-சோழிங்கநல்லூர், பூந்தமல்லி-விவேகானந்தர் இல்லம் என 3 வழித்தடங்களில் மொத்தம் 119 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சுரங்கம் தோண்டுவது, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள கட்டுமான நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, கெல்லீஸ் முதல் தரமணி இடையே மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிக்கு எல் அண்ட் டி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி ஆணையை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது. சுமார் 12 கி.மீ. தொலைவிலான இந்தப் பணியை அடுத்த 52 மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயித்து, கட்டுமானப் பணி தொடங்கப்பட உள்ளது.
சேத்துப்பட்டு, ராயப்பேட்டை, திருவான்மியூர் வழித்தடங்களில் சுரங்கப்பாதையை அமைத்து, மெட்ரோ ரயில் நிலையங்களுக்கான நுழைவுவாயில்கள் அமைக்கப்பட உள்ளன. சுரங்கம் தோண்ட 8 ராட்சத இயந்திரங்களைப் பயன்படுத்த உள்ளதாக எல் அண்ட் டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
36 மாதங்களில்
மேலும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ஏற்கெனவே கோடம்பாக்கம் பவர்ஹவுஸ்-போரூர் வரை சுமார் 8 கி.மீ. தொலைவுக்கு உயர்மட்டப் பாதை அமைத்து, அதில் 9 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான பணி ஆணையைப் பெற்று, கட்டுமான பணி தொடங்கப்பட உள்ளது. இந்தப் பணியை அடுத்த 36 மாதங்களில் முடிக்க உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment