Published : 14 May 2021 07:08 PM
Last Updated : 14 May 2021 07:08 PM

தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்குக் கட்டணம் நிர்ணயித்தது தமிழக அரசு

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை

தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், அதற்கான கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நேற்று (மே 13) மட்டும் தமிழகத்தில் 30,621 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிப்பு எண்ணிக்கை 14,99,485 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 1,83,772 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று சென்னையில் 6,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 42,579 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 297 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 16,768 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்வதற்காக ஆம்புலன்ஸ் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதைப் பயன்படுத்தி, தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அதிகக் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு இன்று (மே 14) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, சாதாரண ஆம்புலன்ஸ்கள் 10 கி.மீ. வரை ரூ.1,500 வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 கி.மீ.க்கு மேல் ஒவ்வொரு கி.மீ.க்கும் கூடுதலாக ரூ.25 வசூலிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் வசதி கொண்ட ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு முதல் 10.கி.மீ. வரை 2,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல், ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.50 வசூலிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வென்டிலேட்டர் உள்ளிட்ட அவசர சிகிச்சை வசதிகொண்ட ஆம்புலன்ஸ்கள் 10 கி.மீ. வரை ரூ.4,000 வரை வசூலிக்கலாம் எனவும், அதற்கு மேல் ஒவ்வொரு கி.மீ.க்கும் 100 ரூபாய் வசூலிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x