Published : 14 May 2021 06:38 PM
Last Updated : 14 May 2021 06:38 PM
அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் சம்பளத்தொகை, 2022, மார்ச் 31 வரை ஓராண்டுக்கு நிறுத்தப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. நேற்று (மே 13) மட்டும் தமிழகத்தில் 30,621 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கரோனா சிகிச்சை, மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு செலவுகளைச் சமாளிப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா தொற்று சிகிச்சை, தடுப்புப் பணிகளுக்காக, பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
அதனை ஏற்று, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர் உட்பட பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர். அதேபோன்று, உலகத் தமிழர்களும் நிதி வழங்க வேண்டும் என, அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் சம்பளத் தொகை, 2022, மார்ச் 31 வரை ஓராண்டுக்கு நிறுத்தப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. கரோனா பரவலால் ஏற்பட்டுள்ள நிதிச் சுமையைத் தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT