Published : 14 May 2021 05:58 PM
Last Updated : 14 May 2021 05:58 PM
நோய்த் தொற்று அதிகமான பிறகே சிலர் மருத்துவமனைக்கு வருவதால் உயிரிழப்பு அதிகமாகிறது என்றும், புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (மே.14) பிற்பகலில் காரைக்கால் வந்தார். காரைக்கால் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகள், சிகிச்சை முறைகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்புடைய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் டாக்டர் அருண், மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ்.பாஸ்கரன், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட், நலவழித் துறை துணை இயக்குநர் டாக்டர் கே.மோகன்ராஜ், அரசு பொது மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி மதன்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் தமிழிசை சவுந்தராராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ’’புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன, என்னென்ன தேவைகள் என்பதைக் காணொலிக் காட்சி மூலம் தொடர்ந்து கேட்டு வருகிறோம். காரைக்காலில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் எடுத்துக் கூறினார். ஆட்சியர் சிறப்பாகச் செயலாற்றி வருகிறார்.
மருத்துவமனை பயன்பாட்டுக்காக 80 ஆக்சிஜன் சிலிண்டர்களைக் காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் சுகாதாரத்துறை இன்று ஒப்படைத்துள்ளது. அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவக் கல்லூரியில் படுக்கை வசதிகளை அதிகரிப்பது, தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கு இன்னும் அதிக மருந்துகள் கொடுப்பதற்கும், பரிசோதனைகளை அதிகரிப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீட்டுத் தனிமையில் உள்ளோர் வெளியில் நடமாடுவதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். மக்கள் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
நோய்த் தொற்று அதிகமான பிறகே சிலர் மருத்துவமனைக்கு வருவதால் உயிரிழப்பு அதிகமாகிறது. இது தடுக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. காரைக்காலில் கரோனா சிகிச்சைக்காகப் பாரம்பரிய மருத்துவ முறைகளையும் பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்காலில் மலிவு விலை உணவகம் தொடங்குவது குறித்துப் பின்னர் சொல்லப்படும்’’ என்று தமிழிசை தெரிவித்தார்.
காரைக்கால் மாவட்டத்தில் தொடக்கம் முதல் தற்போது வரை கரோனாவால் உயிரிழந்தவர்களைத், தன்னார்வலர்கள் மட்டுமே அடக்கம் செய்து வருவது குறித்தும், அவர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் குறித்தும் தமிழிசையிடம் கேட்டதற்கு, அதுகுறித்து விசாரிப்பதாகக் கூறினார். தமிழகத்தைப் போன்று புதுச்சேரியில் மக்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.
பின்னர், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் செயல்பாட்டில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தைப் பார்வையிட்டு தமிழிசை ஆய்வு செய்தார். புதிய பேருந்துநிலையப் பகுதியில் உள்ள கூட்டுறவுப் பால் விற்பனையகத்தில் ரூ.1க்கு முகக் கவசம், ரூ.10க்கு சானிடைசர் விற்பனையைப் பார்வையிட்டு, சிலருக்கு அவற்றை இலவசமாக வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT