Published : 14 May 2021 05:38 PM
Last Updated : 14 May 2021 05:38 PM
வேலூர் மாவட்டத்தில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு இரண்டு நாட்களில் தீர்வு காணப்படும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வேலூருக்கு இன்று (மே 14) வருகை தந்தார். வேலூர் அண்ணா சாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் (ஆட்சியர் பொறுப்பு) பார்த்தீபன், வேலூர் சரக டிஐஜி காமினி, உதவி காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் உள்ளிட்டோர் அவருக்குப் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், வேலூர் சுற்றுலா மாளிகையில் அமைச்சர் துரைமுருகனைச் சந்தித்துப் பேசினார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தின் கரோனா நிலவரம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் பேசினேன். நேற்று கூட ஆக்சிஜன் தேவை எனக் கேட்டார்கள். அதை அனுப்பி வைத்தோம். இரவுக்குள் காலியாகிவிட்டதாகக் கூறி மீண்டும் கேட்டார்கள். இரண்டாவது முறையாகவும் ஆக்சிஜன் அனுப்பியுள்ளோம். இது போதிய அளவுக்கு உள்ளதா என்பதில் எனக்குச் சந்தேகம் உள்ளது.
காரணம், வேலூரைப் பொறுத்தவரை 100 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அனுப்பினால் அது வேலூர் வந்து சேருவதற்குள் 150 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது நிரந்தரமாக உள்ளது. இந்தப் பிரச்சனை இரண்டு நாட்களில் தீர்க்கப்படும். மத்திய அரசிடமும் ஆக்சிஜன் கேட்டுள்ளோம்’’ என்று தெரிவித்தார்.
அப்போது, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT