Published : 14 May 2021 02:02 PM
Last Updated : 14 May 2021 02:02 PM
"திமுக எப்போதும் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயன்றது கிடையாது, முயலப் போவதும் கிடையாது" என்று ஆளும் கூட்டணிக் கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு திமுக புதுச்சேரி தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ பதில் தந்துள்ளார்.
புதுச்சேரியில் குறுக்கு வழியைப் பின்பற்றி ஆட்சியில் அமரத் திமுக முயல்வதாக அதிமுக, பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் கூட்டாகக் குற்றம் சாட்டியிருந்தன.
இந்நிலையில் இதுகுறித்துத் திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா இன்று கூறியதாவது:
"புதுச்சேரியில் கரோனா தொற்று அதி தீவிரமாக உள்ளது. தினந்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு ஆளாகி வருவதுடன், 25க்கும் மேற்பட்டோர் இறந்தும் வருகின்றனர். மேலும் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளும், அவசர சிகிச்சைப் பிரிவில் படுக்கைகளும் கிடைக்காததே அதிக இறப்புக்குக் காரணமாக உள்ளது. இதைச் சரிசெய்து, மக்களைக் காப்பதற்கு மாறாக, இந்த கரோனா கோரப்பிடியின் காலத்திலும் ஆளும் கட்சியினரே அரசியல் செய்து வருகின்றனர்.
அவர்கள் கூட்டணியில் உள்ள குழப்பத்தாலேயே முதல்வர் மட்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சர்கள் யாரும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. மேலும் முதல்வர் கரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றார். கரோனாவின் பிடியில் மக்கள் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அபாயகரமான காலகட்டமாக இருப்பதாலும் இப்போது அரசியல் செய்வது சரியல்ல.
திமுக ஜனநாயகத்தை மீறி எப்போதும் செயல்பட்டது இல்லை. செயல்படப் போவதும் இல்லை. ஆனால், தற்போது எதிரணியில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 10 தினங்களுக்கு மேல் ஆகியும், துணை முதல்வர் பதவி வழங்குவதா? இல்லையா? யார், யாருக்கு அமைச்சர் பதவி? யார், யாருக்கு எந்தத் துறை? ஆகியவற்றில் முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளனர். இந்தக் குழப்பத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
அவர்களிடம் உள்ள குழப்பத்தையும், அதனால் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதையும் மறைப்பதற்காகத் திமுகவையும் சேர்த்து பல்வேறு கட்டுக் கதைகளைக் கூறி வருகின்றனர். திமுகவிற்கு அதன் உயரம் தெரியும். மேலும் ஜனநாயகத்தைக் காக்க நினைக்கும் திமுக எப்போதும் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயன்றது கிடையாது. முயலப் போவதும் கிடையாது."
இவ்வாறு திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT