Published : 14 May 2021 01:53 PM
Last Updated : 14 May 2021 01:53 PM
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. நேற்று (மே 13) மட்டும் தமிழகத்தில் 30,621 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், டிடிவி தினகரன் இன்று (மே 14) தன் ட்விட்டர் பக்கத்தில், "சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நிகழும் அவலங்கள் குறித்து மருத்துவர் ஒருவரின் வீடியோ பதிவு வேதனை தருகிறது. கரோனா பேரிடரின் துயரத்தை விட, அதற்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் மக்கள் அலைக்கழிக்கப்படுவது மிகுந்த மனவலியை ஏற்படுத்துகிறது.
'ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை' என்ற எண்ணம் மக்களிடம் எழத் தொடங்கியுள்ளது. எனவே, அரசு மருத்துவமனைகளில் முறையான வசதிகள் இல்லாமலும், மின்வெட்டினால் வென்டிலேட்டர் இயங்காமலும் நோயாளிகள் உயிரிழப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக செய்திட வேண்டும்.
முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத் துறைச் செயலாளர் ஆகியோர் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நிகழும் அவலங்கள் குறித்த டாக்டர் ஒருவரின் வீடியோ பதிவு வேதனை தருகிறது. கொரோனா பேரிடரின் துயரத்தை விட, அதற்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் மக்கள் அலைக்கழிக்கப்படுவது மிகுந்த மன வலியை ஏற்படுத்துகிறது. 1/3
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 14, 2021
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT