Published : 14 May 2021 12:47 PM
Last Updated : 14 May 2021 12:47 PM
கரோனா காலத்தில் மதுரையில் இலவசமாகப் பயணிகளை அழைத்துச் செல்லும் ஆட்டோ ஓட்டுநரை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் குருராஜ். இவர் கரோனா முதல் அலையின்போதே பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குதல், நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளுக்குச் சென்று காய்கறிகள் வழங்குதல், நியாயவிலைக் கடை பொருட்களை எடுத்துச் சென்று வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் தன்னார்வலராக ஈடுபட்டு வந்தார்.
கரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவிவரும் நிலையில், தன் ஆட்டோவை அவசர காலத் தேவைக்கு மக்கள் இலவசமாகப் பயணிக்கும் வகையில் மாற்றியுள்ளார்.
மாவட்ட நிர்வாகத்ததின் அனுமதி பெற்று அதற்கான அடையாள அட்டையோடு பயணிக்கும் குருராஜ், ஊரடங்கு நேரத்தில் உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்குச் செல்லக்கூடிய நபர்களுக்கும், பேருந்து நிறுத்தம், ரயில் நிறுத்தங்களில் காத்திருக்கும் பயணிகளை அழைத்துச் செல்வதற்கும் தனது ஆட்டோவை இலவசமாக வழங்குகிறார்.
மேலும், ஒருசில கரோனா நோயாளிகளை அவசர மற்றும் நெருக்கடி நேரத்தில் ஆட்டோவில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்.
இவருடைய இந்தப் பணியைப் பொதுமக்கள் பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநர் குருராஜை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி அவருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில், "அன்புள்ள குருராஜுக்கு வணக்கம்.
மதுரை அனுப்பானடியில் ஆட்டோ ஓட்டுநராக உள்ள தங்களின் தொடர்ச்சியான மக்கள் சேவை பாராட்டுக்குரியது.
கரோனா முதல் அலையின்போதும், தற்போது மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் இரண்டாவது அலையிலும் தங்களின் ஆட்டோ மூலம் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும், பிற நோயாளிகளையும், மருத்துவமனைக்குக் கட்டணம் ஏதுமின்றி அழைத்துச் சென்று உயிர் காக்கும் உன்னதமான பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதை அறிந்து மகிழ்கிறேன்.
ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று, நோயாளிகளையும், ரயில் பயணிகளையும் இலவசமாக அழைத்துச் செல்லும் தன்னார்வலராகத் தாங்கள் மேற்கொண்டுள்ள பணி போற்றுதலுக்குரியது. தங்கள் பணியால் ஈர்க்கப்பட்டு இப்பணியில் ஈடுபட்டுள்ள தங்கள் நண்பர் அன்புநாதனும் பாராட்டுக்குரியவர்.
பேரிடர் காலம் எனும் போர்க்களத்தில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள போர்க்கால நடவடிக்கைகளுக்குத் துணை நிற்கும் வகையில் தாங்கள் மேற்கொண்டுள்ள சேவையை அரசின் சார்பில் பாராட்டுகிறேன்.
தாங்களும் குடும்பத்தினரும் நோய்த் தொற்றுக்கால பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்து நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்" என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT