Last Updated : 14 May, 2021 12:33 PM

 

Published : 14 May 2021 12:33 PM
Last Updated : 14 May 2021 12:33 PM

ஸ்டெர்லைட் ஆலை: இயந்திரங்கள் பழுதால் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி

ஸ்டெர்லைட் வேதாந்தா ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி அலகில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணி முறைப்படி நேற்று (மே 13) தொடங்கியது. இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக 4.820 மெட்ரிக் டன் ஆக்சிஜனை, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவப் பயன்பாட்டுக்காக ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் நேற்று அனுப்பி வைத்தது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்துகொண்டு ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கர் லாரியைக் கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார்.

இந்நிலையில் நேற்று இரவு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி அலகில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. ஆக்சிஜன் உற்பத்தி அலகில் பிராண வாயுவைக் குளிர்விக்கப் பயன்படும் கொள்கலனில் ஏற்பட்ட முக்கியப் பழுது காரணமாக ஆக்சிஜன் உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளாகப் பராமரிப்புப் பணிகள் நடைபெறாமல் இருந்ததன் விளைவாக தற்பொழுது இந்தப் பிரச்சினை ஏற்பட்டு இருக்கலாம் என ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் உற்பத்திப் பணியில் ஆய்வக வல்லுநர்கள், வேதியியல் வல்லுநர்கள், பொறியாளர்கள் மின் சீரமைப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் என இரவுபகலாக 250 பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனைக் குளிர்விக்கையில் பழுது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உற்பத்திப் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டு பழுதைச் சரிசெய்யும் வேலைகள் தொடங்கப்பட்டன. இதற்காகப், பொறியாளர்கள் நேற்றிரவு முதலே தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

ஆக்சிஜன் உற்பத்தி அலகில் உள்ள பெரும்பாலான இயந்திரங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்பதனால் குளிர்விக்கும் அலகைத் திறந்து பார்த்தால்தான் உண்மையான பழுது என்ன என்பது தெரியவரும் எனத் தகவல்கள் கூறுகின்றன. மேலும் பழுதான பகுதி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருளாக இருந்தால் அதைச் சரி செய்வதற்கு குறைந்தது மூன்று நாட்களாவது ஆகலாம் எனக் கூறப்படுகிறது.

ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் சார்பில் கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக சுமார் 5 டன் ஆக்சிஜன் ஆக்சிஜன் அனுப்பும் பணி தொடங்கிய நிலையில் அதற்கு மறுநாளே உற்பத்தியில் ஏற்பட்டுள்ள தடை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x