Last Updated : 14 May, 2021 03:12 AM

 

Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM

கரோனாவால் உயிரிழக்கும் தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு: தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு வழங்குகிறது

கோவை

தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கரோனாவால் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்துக்கு தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு அதிகபட்சம் ரூ.7 லட்சம் வரை இழப்பீடு வழங்குகிறது.

தனியார் நிறுவனங்களில் 20-க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டுள்ள தொழில் நிறுவனங்கள், தொழிலாளர் வருங்காலவைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) கீழ் பதிவு செய்வது அவசியமாகும். அவ்வாறு பதிவு செய்துள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், பணிபுரியும் காலத்தில் மரணமடைந்தால் அவர்களின் குடும்பத்துக்கு தொழிலாளர் வைப்புசார் காப்பீடு திட்டத்தின் (இடிஎல்ஐ) கீழ் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த இழப்பீட்டை ரூ.6 லட்சத்தில் இருந்து, ரூ.7 லட்சமாக (அதிகபட்சம்) உயர்த்தி கடந்த ஏப்ரல் 28-ம் தேதி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:

ஒவ்வொரு ஊழியரின் காப்பீட்டுக்காக (இடிஎல்ஐ) அவரது அடிப்படை சம்பளத்தில் 0.50 சதவீத தொகையை மாதந்தோறும் தொழில் நிறுவனங்கள் செலுத்துகின்றன. கரோனா தொற்று மட்டுமல்லாமல் வேறு எந்த காரணத்தால் பணியாளர் உயிரிழந்தாலும் இந்த இழப்பீடு கிடைக்கும்.

பணிபுரிந்துவரும் காலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாலும், பணியின்போதே திடீரென உயிரிழந்தாலும் இழப்பீடு பெறலாம். அவ்வாறு இழப்பீடு பெற, படிவம் 5IF-ஐ பூர்த்தி செய்து, பணிபுரியும் நிறுவனத்தின் தரப்பில் கையெழுத்து பெற்று, ரத்து செய்யப்பட்ட காசோலையை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். இறப்பு சான்று, வாரிசு சான்று ஆகியவற்றையும் அளிக்க வேண்டும்.

அதோடு, இதர பயன்களைப் பெற படிவம் 20 (பிஎஃப் தொகை), படிவம் 10டி (ஓய்வூதியம்) ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். அதிகபட்சம் ஒரு வாரத்துக்குள் இந்த இழப்பீட்டுத் தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் தெரிவிக்கும் வங்கிக் கணக்கில் நேரடியாக இழப்பீடு செலுத்தப்படும். தொழிலாளரின் அடிப்படை சம்பளம் மாதம் ரூ.15 ஆயிரத்துக்குக்கீழ் உள்ளவர்களின் குடும்பத்துக்கு, அவர்கள் பெறும் சம்பளத்துக்கு ஏற்ப இழப்பீடு கிடைக்கும். குறைந்தபட்ச இழப்பீடு ரூ.2.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஓராண்டு பணி அவசியம்

இடிஎல்ஐ திட்டத்தின்கீழ் முழுமையாக இழப்பீடு பெற, பிஎஃப்சந்தாதாரர் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும். ஓராண்டுக்கு குறைவாக பணிபுரிந்திருந்தால் எவ்வளவு பிஎஃப் தொகை கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதோ அந்த தொகை மட்டும் கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x