Published : 11 Jun 2014 08:15 AM
Last Updated : 11 Jun 2014 08:15 AM
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவச முடி திருத்தம், முகச் சவரம் ஆகிய சேவையை தனியார் அறக்கட்டளையினர் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனர்.
நியூ தெய்வா சிட்டி ஹேர் ஆர்ட்ஸ் டிரஸ்ட் என்ற அமைப்பு சார்பில் அதன் மேலாண் இயக்குநர் என்.தெய்வராஜ் தலைமையில் சிகை அலங்காரக் கலைஞர்கள் முடி திருத்தம், முகச் சவரம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவமனையில் தொழுநோய், காச நோய், புற்று நோய், எய்ட்ஸ், தீக்காயம் அடைந்தவர்கள், எலும்புமுறிவு உள்ளிட்ட பிரிவுகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ள 20 பெண்கள் உள்பட 120 பேருக்கு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முடிதிருத்தம், முகச்சவரம் செய்யும் பணியை மேற்கொண்டனர்.
இது குறித்து அந்த அமைப்பின் மேலாண் இயக்குநரும், திருப்பூர் அனுப்பர்பாளையத் தில் முடி திருத்தம் கடை நடத்தி வருபவருமான என்.தெய்வராஜ் கூறியதாவது:
நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு நாள் கணக்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு முடிதிருத்தம் செய்கி றோம். மாவட்ட வாரியாகச் சென்று அரசு மருத்துவமனைகளில் மட்டும் கடந்த 13 ஆண்டு களாக இச்சேவையைச் செய்து வருகிறோம்.
பிறப்பு ஒருமுறை இறப்பு ஒருமுறைதான் அதற்குள் ஏதாவது மக்களுக்கு செய்ய வேண்டும் என்பதற்காக செய்து வருகிறேன். ஏழை நோயாளிகளாக இருந்தாலும் சுகாதார ரீதியில் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் முடிதிருத்தம் செய்ய சிரமமடைகிறார்கள்.
ஆதரவற்றோர் இல்லக் குழந்தைகள், ஆதரவற்ற முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக முடிதிருத்தம் செய்கிறோம். இது தவிர, குடியரசு தினம், சுதந்திர தினத்தின் போது அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசமாக முடிதிருத்தம் செய்கிறோம்.
மாதத்திற்கு சுமார் ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக முடிதிருத்தம் செய்கிறோம். என்னுடன் சேர்ந்து 13 பேர் இப்பணியில் ஈடுபடுகின்றனர். கடைசி வரை இச்சேவையை செய்ய வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT