Published : 13 May 2021 09:29 PM
Last Updated : 13 May 2021 09:29 PM
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இதுவரை ஒலிபெருக்கிகள் மட்டுமே மக்களுக்கு அறிவுரை செய்துவந்த காவல்துறை நாளை முதல் விதிமுறை மீறுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருக்கிறது.
இது தொடர்பாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கொடிய கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவது முழு ஊரடங்கலை அரசு அறிவித்தது. பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும் கரோனா பரவாமல் இருக்க முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி கொண்டு கைகளைக் கழுவுவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்படது மற்றும் இதர அறிவுரைகளை பொதுமக்கள் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.
10.05.21 முதல் இன்று வரை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் கடந்த நான்கு நாட்களாக ஒலிப்பெருக்கி மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்கள் மேற்கூறிய அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து அறிவுரைகள் வழங்கி வந்துள்ளனர். இவ்வறிவுரைகளைப் பொதுமக்கள் ஒரு சிலர் சரியாகவும் ஒழுங்காகவும் பின்பற்றாததால் கொடிய தொற்று மேலும் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
நாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வாகனங்களில் வரும் மற்றும் நடமாடும் நபர்கள் மீது தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.
தமிழக அரசின் அறிவுரைகளைப் பின்பற்றி கரோனா தீவிரமாகப் பரவி வரும் இக்காலக்கட்டத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதிலிருந்து பொதுமக்கள் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதிலிருந்து பொதுமக்கள் தங்களை தவிர்த்துக் கொள்ளும்படி தமிழ்நாடு காவல்துறை கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்களிடம் காவல்துறை கனிவாகவும், கண்ணியமாகவும் நடந்துகொள்ள வேண்டும் என தமிழக டிஜிபி அறிவுறுத்தியிருந்தார்.
ஆனால், காவல்துறையின் மென்மையானப் போக்கை மதிக்காமல் மாநிலம் முழுவதுமே கரோனா விதிமுறை மீறல் அதிகரித்தது. இந்நிலையில், நாளை முதல் விதிமுறை மீறுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT