Published : 13 May 2021 08:07 PM
Last Updated : 13 May 2021 08:07 PM
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக 'தொலைத்தொடர்பு மருத்துவ சேவை' தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் இன்று (மே 13) கூறியதாவது:
"திருப்பத்தூர் மாவட்டத்தில் பெருகி வரும் கரோனா தொற்றைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. தற்போது ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், மருத்துவ உதவிகளுக்காக பொதுமக்கள் வெளியே வருகின்றனர். இதனால், நோய்ப் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதைத் தவிர்க்கும் வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் 'தொலைத்தொடர்பு மருத்துவ சேவை' (Tele Medicine) தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கரோனா கண்காணிப்பு மையத்தில் 'தொலைத்தொடர்பு மருத்துவ சேவை' ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இங்கு 24 மணிநேரமும் மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள். எனவே, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளை இந்த மருத்துவர்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் தங்களின் உடல் நிலை, நோய்க்கான அறிகுறிகள், அதற்குத் தேவையான மருத்துவ அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெறலாம்.
அதேபோல, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கரோனா நோயாளிகளைக் கண்காணித்து அவர்களுக்கு வழிகாட்ட இந்த 'தொலைத்தொடர்பு மருத்துவ சேவை' கூடுதல் பலனாக இருக்கும்.
எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தொலைத்தொடர்பு மருத்துவ சேவையை தொடர்பு கொள்ள 94999-33821, 94999-33822 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம்.
பொதுமக்கள் தொலைத்தொடர்பு மருத்துவ சேவையை பயன்படுத்தி கரோனா நோயிலிருந்து மீண்டு வர வேண்டும் என்பதால் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட அவசரக்கட்டுப்பாட்டு அறையின் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதி என்ன? பரிசோதனை மையங்கள் எங்கெல்லாம் உள்ளது? தடுப்பூசி மையங்கள் எத்தனை உள்ளன? கரோனா கவனிப்பு மையங்கள் மற்றும் அதை சார்ந்த தகவல்களை பெற 04179-222111, 04179-229008, 04179-1077 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்".
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT