Published : 13 May 2021 07:59 PM
Last Updated : 13 May 2021 07:59 PM

அரசு மருத்துவமனைகளுக்கு வெளியே ஆம்புலன்ஸில் உயிரிழப்பு ஏற்படுவது ஏன்?- மா.சுப்பிரமணியன் விளக்கம்

அரசு மருத்துவமனைகளுக்கு வெளியே ஆம்புலன்ஸில் உயிரிழப்பு ஏற்படுவது ஏன் என்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசும்போது, ''தனியார் மருத்துவமனைகளில் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் வரும்பொழுது தொற்றாளர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர்.

ஆனால், அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் வசதிக்கேற்பவே நோயாளிகளை அனுமதிக்க முடியும். ஒரே படுக்கையில் இருவரையோ, மூன்று பேரையோ அனுமதிக்க முடியாது.

அந்த வகையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 1,200 ஆக்சிஜன் படுக்கைகள் முழுமையாக நிரம்பி உள்ளன. ஆக்சிஜன் பற்றாக்குறையால் சில படுக்கைகள் முழுமையாக இயங்காத நிலை உள்ளது. மீதமுள்ள படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்குக் கூடுதலாக ஆக்சிஜன் வசதி நமக்குத் தேவை. ரூர்கேலாவில் இருந்து 80 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜன் வாகனங்கள் ரயிலில் புறப்பட்டு உள்ளன. இன்று நள்ளிரவு அல்லது நாளை காலைக்குள் அந்த வாகனம் வந்து விடும். அதன் பிறகு நிலைமை ஓரளவு சீராகும். அதற்குப் பிறகு ஆக்சிஜன் படுக்கைகளை இன்னும் அதிகரிக்கலாம்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை அப்படியே கொடுத்து விட்டால், தொற்று எந்த அளவுக்குப் பரவும் என்பது எல்லோருக்குமே தெரியும். அதனால் உடலை ஆய்வுக்கு உட்படுத்திய பிறகு, சுகாதார ஆய்வாளர் சான்றிதழ் கொடுத்த பின்பே உடலை அளிக்க முடியும்.

சமூகப் பரவல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இத்தகைய வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன'' என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x