Published : 13 May 2021 06:26 PM
Last Updated : 13 May 2021 06:26 PM
புதுச்சேரியில் 80 சதவீத உயிரிழப்பகள் மருத்துவமனைகளுக்கு தாமதமாக வருவதாலேயே ஏற்படுகிறது, ஆக்சிஜன் படுக்கைகள் குறைவாக உள்ளன என்று புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று(மே. 13) வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது, ‘‘புதுச்சேரியில் கடந்த 3 நாட்களாகவே கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 2,000 நோக்கி போகிறது. இதில் இருந்து தெரிவது தொற்று மிக உச்சத்தில் இருக்கிறது.
ஆகவே மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
80 சதவீத உயிரிழப்புகள் அனைத்தும் மருத்துவமனைக்கு தாமதமாக வருவதால் தான் ஏற்படுகிறது. அறிகுறி இருந்தும் பரிசோதனை செய்து கொள்வதில்லை. மருத்துவமனைக்கு வருவதில்லை. இறுதியாக மூச்சுத்திணறல் ஏற்படும் போதுதான் மருத்துவமனைக்கு வருகின்றனர்.
இதனால், போதிய மருந்துகள், ஆக்சிஜன், வெண்டிலேட்டர் கொடுக்க முடிவதில்லை. இதுபோன்ற நிலை வராமல் இருக்க வேண்டும் என்றால் அறிகுறி வந்தவுடன் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மேலும் தேவையான ரெம்டெசிவர் மருந்துகள் கையிருப்பில் உள்ளன. ஆக்சிஜன் படுக்கைகள் குறைவாக தான் உள்ளன. இன்று பரவாயில்லை. இன்னும் ஓரிரு நாட்கள் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆகவே மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.’’இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT