Published : 13 May 2021 03:02 PM
Last Updated : 13 May 2021 03:02 PM
தமிழ்நாட்டில் இருந்து 20 நாட்களில் கரோனாவை ஒழிப்பது உறுதி. ஏனெனில், கரோனாவை ஒழிப்பதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார் என்று ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ எம்.பழனியாண்டி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ எம்.பழனியாண்டி இன்று ஸ்ரீரங்கம் தொகுதிக்குள் உள்ள கரோனா சிகிச்சை மையம் மற்றும் கரோனா பாதுகாப்பு சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார்.
ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் ஆய்வு செய்தபிறகு எம்.பழனியாண்டி செய்தியாளர்களிடம் கூறியது:
’’ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சைப் பிரிவில் உள்ள 50 படுக்கைகளில் 46 படுக்கைகளில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், 22 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி உடையவை. ஆக்சிஜன் படுக்கைகளைக் கூடுதல் ஆக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு ஒரு நாளைக்கு 10 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவைப்படுவதாகவும், ஆனால் தட்டுப்பாடு இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு தகவல் கூறினேன். போதிய ஆக்சிஜன் சிலிண்டர் அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்தார். மேலும், மருத்துவமனைக்குத் தேவையான எந்த உதவிகளையும் செய்வதாக நான் மருத்துவர்களிடம் உறுதி அளித்துள்ளேன்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் கரோனா சிகிச்சை மையங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, குறைகள் இருந்தால் அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏனெனில், நாங்கள் எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட்டதே மக்கள் சேவையாற்றத்தான். மக்களுக்குத் தங்குதடையின்றி, தேவையானதை நிறைவேற்றித் தருவோம். பேட்டைவாய்த்தலையில் விரைவில் கரோனா பாதுகாப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது.
கரோனாவை 15, 20 நாட்களில் தமிழ்நாட்டில் இருந்து ஒழிப்பது உறுதி. ஏனெனில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் மிகவும் தீவிரமாக உள்ளார். மக்கள் நலனிலும், அவர்கள் உயிரைக் காப்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்’’.
இவ்வாறு எம்எல்ஏ எம்.பழனியாண்டி தெரிவித்தார்.
தொடர்ந்து, சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு சிகிச்சை மையங்களில் எம்எல்ஏ பழனியாண்டி ஆய்வு செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT