Published : 13 May 2021 02:36 PM
Last Updated : 13 May 2021 02:36 PM
கரோனா ஒழிப்பு நடவடிக்கைக்காக தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்காக போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஒரு நாள் ஊதியம் வழங்க முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்துவரும் சூழலில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள் என்று பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், பெருந்தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பலர் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்து துறை முதன்மை செயலர் மற்றும் அனைத்து போக்குவரத்து கழகங்களின் மேலாண்மை இயக்குனர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் இந்த சூழலில் தமிழக அரசு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளையும் தொழிற்சங்க கூட்டமைப்பு வரவேற்கிறது.
தமிழக அரசு எடுத்து வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் அடிப்படையில் போக்குவரத்து கழகங்களில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்கள் ஒரு நாள் ஊதியத்தை கரோனா நிவாரண நிதிக்கு வழங்க கூட்டமைப்பு சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
எனவே, தொழிலாளர்களிடம் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்து முதல்வரின் நிவாரண நிதியில் சேர்க்க போக்குவரத்து கழக நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT