Last Updated : 13 May, 2021 01:17 PM

 

Published : 13 May 2021 01:17 PM
Last Updated : 13 May 2021 01:17 PM

கோவையில் கரோனா தடுப்புப் பணிக்கூட்டம்; திமுக அமைச்சர்களுடன் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பு

கோவை 

கோவையில் இன்று (மே 13) நடந்த கரோனா தொற்றுத் தடுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் திமுக அமைச்சர்களுடன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் இணைந்து கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாகக் கோவையில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கோவையில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், அரசு அலுவலர்கள், தொழில்துறைப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கோவையில் இன்று (மே 13) நடந்தது.

தொற்று தடுப்பு நடவடிக்கைக்கான கோவை மாவட்டப் பொறுப்பு அமைச்சர்கள் க.ராமச்சந்திரன் (வனத்துறை), சக்கரபாணி (உணவுத்துறை) ஆகியோர் கூட்டத்துக்குத் தலைமை வகித்துப் பேசினர்.

அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பு

இந்தக் கூட்டத்தில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இந்தக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுக எம்எல்ஏக்களான முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், மற்றும் அம்மன் அர்ச்சுணன், அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், அமுல்கந்தசாமி, வி.பி.கந்தசாமி ஆகியோர் காலை நிகழ்ச்சி தொடங்குவதற்குச் சில மணி நேரத்துக்கு முன்னரே வந்தனர்.

ஆனால், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரத் தாமதம் ஆகியது. இதனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் முதல் தளத்தில், நுழைவாயில் அருகே காத்திருந்தனர். 12 மணிக்கு வந்த அமைச்சர்கள் கூட்டம் நடக்கும் கட்டிடத்துக்குள் நுழைந்து, அதிமுக எம்எல்ஏக்களைப் பார்த்து வணக்கம் வைத்துவிட்டு, கூட்ட அரங்குக்குச் சென்றனர்.

அதன் பின்னர் கூட்ட அரங்கத்துக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் மேடையில் அமர்ந்தனர். திமுகவைச் சேர்ந்த அமைச்சர்களுடன் உரையாடினர்.

இதுகுறித்துச் சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது, "நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் கோவையில் திமுக வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. 10 தொகுதிகளிலும் அதிமுக எம்எல்ஏக்களே வெற்றி பெற்றுள்ளனர். கோவையில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் சூழலில், கட்சிப் பாகுபாடு இன்றி திமுகவைச் சேர்ந்த அமைச்சர்களுடன், அதிமுக எம்எல்ஏக்கள் இணைந்து செயல்படுவது வரவேற்கத்தக்கது. இது ஆக்கப்பூர்வமான அரசியலுக்கு முன்னோட்டம், இது தொடர வேண்டும்" என வலியுறுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x