Published : 13 May 2021 11:49 AM
Last Updated : 13 May 2021 11:49 AM
அரக்கோணம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று நோயாளி உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் 120 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கரோனா ஐசியு வார்டில் சிகிச்சை பெற்றுவந்த பெண் மற்றும் கரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த 4 ஆண்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் விசாரித்தபோது, "கரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த 54 வயதுப் பெண் ஒருவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். அதேபோல் கரோனா தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 37 வயது, 43 வயது, 57 மற்றும் 58 வயதுள்ள ஆண்கள் நான்கு பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வராமல் இருந்தன. மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட இவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்தவர்கள் திடீரெனஉயிரிழந்தனர்.
இங்கு சிகிச்சைக்கு வருபவர்கள் கரோனா தொற்று அதிகம் பாதித்து, மூச்சுத்திணறல் ஏற்பட்ட பிறகே வருகின்றனர். கரோனா தொற்றின் ஆரம்பநிலை அறிகுறிகள் இருந்ததும் உடனடியாகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் அல்லது மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் அவர்களைக் கட்டாயம் குணப்படுத்த முடியும்" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT