Published : 13 May 2021 11:31 AM
Last Updated : 13 May 2021 11:31 AM
கரூர் சட்டப்பேரவை அலுவலகத்தில் தளபதி கிச்சனை மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி இன்று (மே 13ம் தேதி) தொடங்கி வைத்து ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினார். இங்கு 3 வேளையும் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தமிழக மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கரூர் பிரம்மதீர்த்தம் சாலையில் உள்ள சீரமைக்கப்பட்ட கரூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை இன்று (மே 13ம் தேதி) காலை பார்வையிட்டார். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அங்கு தளபதி கிச்சனை தொடங்கி வைத்து, சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முன் பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினார்.
அப்போது கரூர் எம்.பி. செ.ஜோதிமணி, எம்எல்ஏக்கள் (குளித்தலை) மாணிக்கம், (அரவக்குறிச்சி) ஆர்.இளங்கோ, (கிருஷ்ணராயபுரம்) சிவகாமசுந்தரி ஆகியோர் உடனிருந்தனர். பெண்கள், சிறுவர், சிறுமியர், முதியவர்கள் வரிசையில் காத்திருந்து உணவுப் பொட்டலங்களைப் பெற்றுச் சென்றனர். இதில் கருப்பு, வெள்ளை, சிவப்பு என அதிமுக கொடி வர்ணம் பூசிய தடியை ஊன்றி வந்த மூதாட்டி ஒருவரும் உணவுப் பொட்டலம் பெற்று சென்றார்.
அப்போது அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறும்போது, ’’கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள், ஏழை, எளிய, அடித்தட்டு மக்கள், வயதானவர்கள், உணவுக்கு வழியில்லாதவர்களுக்காக கரூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் தளபதி கிச்சன் உருவாக்கப்பட்டுள்ளது.
காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளைகளும் தடையின்றி, ஏழை, எளிய, வயதான, அடித்தட்டு மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்குவதற்கு உண்டான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்று (மே 13ம் தேதி) அதற்குண்டான பணிகளைத் தொடங்கி இருக்கின்றோம். எந்த ஏழை, எளிய மக்கள் தங்களுக்கு உணவில்லை என்று நினைக்கின்றார்களோ அவர்கள் இங்கு வந்து உணவுப் பொட்டலங்களைப் பெற்றுச் செல்லலாம்’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT