Published : 13 May 2021 11:22 AM
Last Updated : 13 May 2021 11:22 AM
தனது தொகுதி நிதியிலிருந்து மதுரை இளைஞர்கள் 30000 பேருக்கு தடுப்பூசி செலுத்த ரூ.1 கோடி ஒதுக்குவதாகவும் அதற்கு ஒப்புதல் வழங்கும்படி மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
“ஒன்றிய அரசே, ஒப்புதல் தருக, மத்திய சுகாதார செயலாளருக்கு நான் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்.
முதலில் நாடு முழுமையும் உச்சபட்ச அர்ப்பணிப்போடும், கடும் உழைப்போடும் கோவிட்டை எதிர்த்து களத்தில் போராடி வரும் சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். அவர்களின் முயற்சிகள், அமைதியையும் நிம்மதியையும் மக்களின் வாழ்வில் விரைவில் கொண்டு வருமென்று நம்புகிறேன்.
கோவிட் பேரிடர் இரண்டாம் அலை 18-45 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை அதிகமாகப் பாதிக்கும் என பலரும் எச்சரித்து வருகின்றனர். இதை மனதில் கொண்டு ஒன்றிய அரசாங்கம் இந்த வயது அடைப்பிற்குள் வரக் கூடிய அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யும் என்று நம்புகிறேன்.
மேலும், களத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தவிர குடிமைச் சமூகமும் இந்த நிவாரணப் பணியில் ஈடுபடுத்த வேண்டும், அரசின் முயற்சிகளுக்கு துணை புரியச் செய்ய வேண்டுமென கருதுகிறேன். அதுவும் சுகாதாரப் பணியாளர்கள், அரசின் முன்களப் பணியாளர்கள் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார்கள் என்ற செய்தி வந்துள்ள சூழ்நிலையில் இது முக்கியமானது. ஓராண்டு நீண்ட பேரிடர் பணியில் இத்தகைய மன உளைச்சல் இயல்பானதுதான்.
ஒன்றிய, மாநில அரசின் பணிகளில் உதவ, முன்னெச்சரிக்கை மற்றும் கோவிட் வழிகாட்டல்கள் குறித்த செய்திகளை மக்களிடம் சேர்க்க, விழிப்புணர்வை உருவாக்க என்னுடைய மதுரை நாடாளுமன்ற தொகுதியில் தன்னார்வ இளைஞர்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளேன். அவர்கள் இரண்டாம் நிலை சுகாதார ஆர்வலர் படையாக செயல்படுவார்கள். அலுவலர்க்கு உதவுவார்கள். கோவிட் நோயாளிகளுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் உதவுவார்கள்.
மருத்துவமனை படுக்கைகள் கிடைப்பது, உணவு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டல், நிலைமையை கண்காணிப்பது, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுடன் தொடர்புகளைப் பலப்படுத்துவது, எல்லோருக்கும் தடுப்பூசி ஆகியவற்றை உறுதி செய்வார்கள். இதன் வாயிலாக முன் களப் பணியாளர்களுக்கு வேலைப் பளுவை குறைக்க முடியும். அதன் மூலம் கோவிட் தொற்றாளர்களுக்கான சிகிச்சையில் மட்டும் அவர்களின் கவனக் குவிப்பை உறுதி செய்ய முடியும்.
இதன் மீது உங்களின் ஒத்துழைப்பை நாடுகிறேன். கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை எனது தொகுதியில் உள்ள இளைஞர்களுக்கு எனது எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதி வாயிலாக முன்னுரிமை அளித்து வழங்கிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். அதன் மூலம் அவர்களை கோவிட் எதிர்ப்பு களப் பணியில் அவர்களை தன்னார்வலர்கள் ஆக எனது தொகுதியில் பயன்படுத்த முடியும்.
இதற்காக துவக்கமாக எனது எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 30000 தன்னார்வ இளைஞர்களுக்கு முழுமையாக தடுப்பூசி வழங்க விரும்புகிறேன். அதன் பின் கோவிட் ஒழிப்புப் பணியில் அவர்கள் ஈடுபடுவார்கள். நான் அடிப்படையான கொள்கை நிலையை வலியுறுத்திப் பதிவு செய்கிறேன். "எல்லோருக்கும் இலவச தடுப்பூசி" என்பதற்கான கொள்கை உருவாக்கப்பட்டு அமலாக்கப்பட்டு ஒட்டு மொத்த மக்கள் பயன் பெற வேண்டும். அதுவே சரியானதாகும்.
அரசின் தற்போதைய கொள்கை வரம்பிற்குட்பட்டு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன். எனது தொகுதிக்கு போதுமான தடுப்பூசிகளை வழங்குங்கள். மேலே கூறிய மனித நேய சேவைக்கு அது பயன்படும். தன்னார்வ இளைஞர் 30000 பேருக்கு (ரூ 150 வீதம் ஒரு முறைக்கு) இரண்டு முறைக்கும் சேர்த்து எனது எம். பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்குவேன். உங்களின் ஒப்புதல் கிடைத்தவுடன் இத் தொகை அனுப்பப்படுவதை உறுதி செய்வேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT