கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: கூடுதல் தலைமைச் செயலர் உத்தரவு

கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தியாகி குமரன் வீதியில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியை இன்று  ஆய்வு செய்த கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா. அருகில் மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன், மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் உள்ளனர்.
கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தியாகி குமரன் வீதியில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியை இன்று  ஆய்வு செய்த கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா. அருகில் மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன், மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் உள்ளனர்.
Updated on
1 min read

மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என, கோவையில் இன்று (மே 12) நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு, கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா உத்தரவிட்டார்.

தமிழக அரசின் வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறையின் கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா இன்று (மே 12) கோவைக்கு வந்தார்.

அவரும், மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் இஎஸ்ஐ மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கரோனா சிகிச்சைக்கான கொடிசியா சிகிச்சை மையம் உள்ளிட்ட இடங்களை நேற்று பார்வையிட்டனர்.

இப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பிரத்யேக வசதிகள் குறித்தும், கரோனா நோயாளிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதிகள் குறித்தும், போதிய அளவில் ஆக்சிஜன் மற்றும் பிரத்யேக மருந்துகளின் இருப்பு நிலவரம் குறித்தும் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஆய்வு ஆட்சியர் உள்ளிட்டோரிடம் விசாரித்தார்.

முகக்கவசம் கட்டாயம்

அதைத் தொடர்ந்து உக்கடம் காய்கறி மார்க்கெட், தியாகி குமரன் வீதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதி, ஆர்.எஸ்.புரம் தற்காலிக பூ மார்க்கெட் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா ஆய்வு செய்தார்.

அப்போது அவர், ‘மேற்கண்ட மார்க்கெட்டுகளுக்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள் முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி கடைபிடித்தல் போன்ற கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றுவதை மாநகராட்சி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். தினசரி கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்,’ என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்

அதன் பின்னர், மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கரோனா பரவல் தடுப்புப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை நடந்தது. கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா தலைமை வகித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர்,‘‘ கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்,’’ என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன், மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன், மாநகர காவல்துணை ஆணையர் ஸ்டாலின், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், இஎஸ்ஐ மருத்துவமனை டீன் ரவீந்திரன், அரசு மருத்துவமனை டீன் நிர்மலா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in