Published : 12 May 2021 07:45 PM
Last Updated : 12 May 2021 07:45 PM

முதல்வர் ஸ்டாலின் கிரீன்வேஸ் சாலை அமைச்சர்கள் இல்லத்துக்கு மாறுகிறார்?

சென்னை

முதல்வர் ஸ்டாலின் இட நெருக்கடி, போக்குவரத்து நெரிசல் பிரச்சினை காரணமாக தனது சித்தரஞ்சன் தாஸ் இல்லத்திலிருந்து அமைச்சர்கள் வசிக்கும் கிரீன்வேஸ் சாலைக்குக் குடிபெயர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவருடன் 33 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். தமிழக அமைச்சர்கள், முதல்வர் வசிப்பதற்காக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பசுமை வழிச் சாலையில் பெரும் பங்களாக்கள் உண்டு. இங்குதான் முதல்வர், சபாநாயகர், துணை சபாநாயகர், அமைச்சர்கள் முதல் நீதிபதிகள் வரை அனைவரும் குடியிருந்து வருகின்றனர்.

முதல்வராக இருந்தபோது எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வராகப் பதவி வகித்த ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவரும் இங்குதான் வசித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவரது சித்தரஞ்சன் தாஸ் இல்லத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் தேர்தலில் அதிமுக தோல்விக்குப் பிறகு ஆட்சியை இழந்த நிலையில், வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்கள் இந்நாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டுமே என்பதால் அமைச்சர்கள் இல்லத்தைக் காலி செய்து வருகின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி அமைச்சருக்கு இணையான அந்தஸ்து என்பதால் அவர் ஏற்கெனவே உள்ள இல்லத்திலேயே தொடர்ந்து வசிக்க உள்ளார். இதனிடையே முதல்வர் ஸ்டாலின் இட நெருக்கடி, வாகனப் போக்குவரத்து நெருக்கடி காரணமாக அமைச்சர்கள் வசிக்கும் இல்லத்துக்கு மாற முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2006 முதல் 2011 வரை உள்ளாட்சித்துறை, துணை முதல்வர் பதவி வகித்த ஸ்டாலின் கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் வசித்து வந்தார். பின்னர் 2011ஆம் ஆண்டு திமுக தோல்விக்குப் பின்னர் தனது சொந்த வீட்டுக்குச் சென்றுவிட்டார். அதன் பின்னர் குறிஞ்சி இல்லத்தில் சில ஆண்டுகள் சி.வி.சண்முகம் வசித்து வந்தார். தற்போது முன்னாள் சபாநாயகர் தனபால் வசித்து வருகிறார்.

ஸ்டாலின் வீடு மாறும் எண்ணம் உள்ளதால் தாம் ஏற்கெனவே வசித்த குறிஞ்சி இல்லத்துக்கே செல்ல முடிவெடுத்துள்ளார். முன்னாள் சபாநாயகர் தனபால் வீட்டைக் காலி செய்ய 2 மாத காலம் அவகாசம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் 2 மாதம் பொறுத்து காலி செய்தபின் குறிஞ்சி இல்லத்தைத் தயார்படுத்தும் பணி நடைபெறும். அதன் பின்னர் அந்த இல்லத்துக்கு ஸ்டாலின் மாறுவார் என்று கூறுகின்றனர்.

அதே நேரம் அந்த இல்லத்தை முதல்வர் அலுவலகமாக (Camp Office) ஸ்டாலின் பயன்படுத்துவார், சித்தரஞ்சன் இல்லத்தில்தான் வசிப்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதுவரை தமிழக முதல்வராக இருந்தவர்களில் கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி வசித்தார். ராமாவரம் இல்லத்தில் எம்ஜிஆர் வசித்தார். போயஸ் இல்லத்தில் ஜெயலலிதா வசித்தார். இவர்களைப் பின்பற்றி ஸ்டாலினும் சித்தரஞ்சன் இல்லத்தில் வசிப்பாரா? குறிஞ்சி இல்லம் மாறுவாரா? அல்லது முதல்வர் அலுவலகமாக மட்டும் செயல்படுமா என்பது போகப்போகத் தெரியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x