Published : 12 May 2021 07:06 PM
Last Updated : 12 May 2021 07:06 PM

மதுரையில் வெயில், கரோனாவால் எலுமிச்சம் பழ விலை அதிகரிப்பு: ஒரு பழம் 8 ரூபாய்க்கு விற்பனை

மதுரை

மதுரையில் வெயலின் தாக்கம் அதிகரித்துள்ளதோடு கரோனா தொற்றைத் தடுக்க எலுமிச்சை சாறு பிழிந்து குடிக்க பொதுமக்கள் அதிகளவு எலுமிச்சம் பழங்களை வாங்குவதால் அதன் விலை உயர்ந்துள்ளது.

மதுரையில் வழக்கமாகவே மார்ச் முதல் மே வரை வெயில் அதிகளவில் இருப்பதுண்டு.

கடந்த சில வாரங்களாக பகலில் வெயிலின் தாக்கமும், இரவில் புழுக்கமும் மக்களை வாட்டி வதைக்கிறது.

உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், பொதுமக்கள் எலுமிச்சம் பழ ஜூஸ் அருந்துவது வழக்கம். இந்த ஆண்டு, கரோனா தொற்று ஏற்பட்டு மக்கள் ஊரடங்கால் வீடுகளில் முடக்கி கிடக்கின்றனர். கரோனா தொற்றைத் தடுக்கவும், அதன் வீரியத்தை குறைக்கவும் எலுமிச்சம் பழச் சாற்றை மக்கள் அதிகளவு பிழிந்து அதிகாலை, மாலை நேரங்களில் குடிக்கின்றனர்.

அதனால், சந்தைகளில் எலுமிச்சைப்பழம் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் எலுமிச்சம் பழம் பெரியளவில் சாகுபடி இல்லை. அழகர் கோயில் பகுதியில் ஓரளவு விளைச்சல் இருக்கிறது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ஈரோடு, தென்காசி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து விற்பனை வருகிறது.

மதுரயைில் இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு எலுமிச்சம் பழம் 2 ரூபாயாக இருந்தது. ஆனால், தற்போது ஒரு பழமே இந்த ஊரடங்கில் 8 ரூபாய் விற்கிறது.

பருமன் சிறுத்த பழங்களே 5 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.அதனால், எலுமிச்சம்பழம் எளிய மக்களின் எட்டாக்கனியாகிவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x