Published : 12 May 2021 05:59 PM
Last Updated : 12 May 2021 05:59 PM
முதல்வர் மருத்துவமனையில் உள்ள சூழலில் பாஜகவின் அடுத்தடுத்த நடவடிக்கையால் கடும் குழப்பமான சூழல் புதுச்சேரியில் நிலவுகிறது. இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸுக்கு திமுக நெருக்கம் காட்டுகிறது. ஆனால், திமுகவின் கனவு பலிக்காது என்று பாஜக விமர்சித்துள்ளது.
புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக ஓரணியாகவும், காங்கிரஸ், திமுக, இந்தியக் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஓரணியாகவும் போட்டியிட்டன.
இதில், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக பெரும்பான்மைக்குத் தேவையான 16 இடங்களைக் கைப்பற்றியது. கூட்டணியில் இடம்பெற்ற பாஜக துணை முதல்வர் உட்பட 3 அமைச்சர் பதவிகளையும், சபாநாயகர் பதவியையும் கேட்டது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இதற்கு சம்மதம் தரவில்லை. 2 அமைச்சர்கள், துணை சபாநாயகர் பதவி தருவதாகக் கூறினார். இதனால் கூட்டணி அமைச்சரவை அமைவதில் இழுபறி நிலவியது. இதனிடையே, ரங்கசாமி ஆட்சியமைக்க பாஜக எம்எல்ஏக்கள் கடிதம் அளித்தனர். அமைச்சர்கள் பங்கீடு முடியாத சூழலில், முதல் கட்டமாக முதல்வராக ரங்கசாமி மட்டும் கடந்த 7-ம் தேதி பதவியேற்றார்.
பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, துணை முதல்வர் உட்பட 3 அமைச்சர்கள் விரைவில் பதவியேற்பார்கள் என்றார். ஆனால், ரங்கசாமி இதுவரை பாஜகவுக்கு அமைச்சர் ஒதுக்கீடு குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
இச்சூழலில், முதல்வர் ரங்கசாமி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில், தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களே பதவியேற்காத நிலையில், புதுவை சட்டப்பேரவைக்கு 3 நியமன எம்எல்ஏக்களைத் தங்கள் கட்சியினரை மத்திய பாஜக அரசு நேரடியாக நியமித்துள்ளது.
தற்போது, முதல்வர் ரங்கசாமி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டதால் அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிப் போயுள்ளது. இச்சூழ்நிலையில், என்.ஆர்.காங்கிரஸுக்கு இணையாக சம பலம் உள்ளது என, நிரூபிக்கும் வகையில் பாஜக நியமன எம்எல்ஏக்களை நியமித்துள்ளதும் ரங்கசாமியை அதிருப்திக்குள்ளாக்கியது.
மாநில அரசிடம் ஆலோசிக்காமல், முதல்வர் மருத்துவமனையில் இருக்கும் சூழலில் நியமன எம்எல்ஏக்கள் நியமிக்கப்பட்டுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, இதர அரசியல் கட்சியினர் தொடங்கி கூட்டணிக் கட்சியிரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தற்போது கரோனா தொற்று புதுச்சேரியில் கடுமையாக அதிகரித்து வரும் சூழலில், அரசியல் சூழலும் கடும் குழப்பத்தில்தான் உள்ளது.
அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது, "சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே என்.ஆர்.காங்கிரஸோடு கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க புதுவை திமுக விரும்பியது. கட்சித் தலைமை அனுமதிக்காததால் காங்கிரஸோடு கூட்டணி அமைத்து 6 தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
ரங்கசாமியின் உடல் நலம் குறித்துக் கேட்டறிந்த தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ரங்கசாமி நலம் பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போதைய பாஜகவின் செயல்பாடுகளினால் திமுக தரப்பும், ரங்கசாமியிடம் நெருக்கம் காட்டுகிறது. இதன் முடிவை ரங்கசாமிதான் எடுக்க வேண்டும்" என்கின்றனர்.
பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதனிடம் கேட்டதற்கு, "புதுச்சேரியில் திமுக, கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகளின் கனவு பலிக்காது. பாஜகவில் துணை முதல்வர், அமைச்சர்கள் பதவி ஏற்றுப் பணி செய்வார்கள். என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்யும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT