Published : 12 May 2021 05:16 PM
Last Updated : 12 May 2021 05:16 PM
மக்களால் தேர்வான அரசு அமைந்தும், அதிகாரத்துக்கு வராத மக்களாட்சியால் புதுச்சேரி மக்கள் தவித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் கரோனா 2-வது அலை சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகப் பரவத் தொடங்கியது. தேர்தல் நேரத்தில் படிப்படியாக நோயாளிகளின் எண்ணிக்கை புதுச்சேரியில் அதிகரிக்கத் தொடங்கியது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியாகும்போது தொற்று அதிகரித்தது.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாததால், உறுதியான ந டவடிக்கையை எடுக்க முடியாமல் புதுச்சேரியில் அதிகாரிகள் தயங்கி வந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் பதவியேற்கும் முன்பாகவே, சுகாதாரத்துறை அதிகாரிகளை அழைத்துப் பேசி நிவாரணம் அறிவித்துப் பணிகள் நடந்து வருகின்றன.
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி முதல்வராக ரங்கசாமி மட்டும் கடந்த 7-ம் தேதி பதவியேற்றார். அவர் பொறுப்பேற்றவுடன் சுகாதாரத்துறை அதிகாரிகளை அழைத்து கரோனாவைக் கட்டுப்படுத்த, தடுக்க ஆலோசனை நடத்துவார் என மக்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், அன்றைய தினம் 3 கோப்புகளில் ரங்கசாமி கையெழுத்திட்டுச் சென்றுவிட்டார். அதன்பின் 9-ம் தேதி சட்டப்பேரவைக்கு வந்த ரங்கசாமி, 20 நிமிடம் மட்டும் பணிகளைக் கவனித்துவிட்டு வெளியேறிவிட்டார். உடல்நலக் குறைவு ஏற்பட்ட அவருக்குப் பரிசோதனை நடத்தியபோது கரோனா தொற்று உறுதியானது. அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து, ஊரடங்கு புதுச்சேரியில் அமலாகியுள்ளது. ஆனால், மக்கள் பாதிப்போ கரோனாவை விடப் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதுபற்றி பொதுமக்கள் தரப்பில் விசாரித்தபோது, "புதுவையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு அமைந்தாலும், மக்களாட்சி அதிகாரத்துக்கு வராத நிலை உள்ளது. தற்போது புதுவையில் கரோனா பரவலைத் தடுக்க தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை.
அதே நேரத்தில், பக்கத்து மாநிலமான தமிழகத்தில் பல நடவடிகைக்கள் எடுக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் உயிரிழப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில், அரசு பதவியேற்றும் எந்த உறுதியான நடவடிக்கையும் இல்லாதது, நிவாரணம் வழங்காதது போன்றவை, புதுவை மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது" என்று குற்றம் சாட்டுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT