Published : 12 May 2021 03:59 PM
Last Updated : 12 May 2021 03:59 PM
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவமனையின் முதல்வர் ரவீந்திரன் செவிலியர் கால்களில் விழுந்து கண்ணீர் விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செவிலியர் சேவையின் முன்னோடி என போற்றப்படும் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளான மே 12-ம் தேதி ‘சர்வதேச செவிலியர் தினம்’ ஆகக் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு செவிலியர் தினம் கரோனா பெருந்தொற்றுக்கு இடையே நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. கோவையில் கரோனா தொற்றுக்குச் சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவமனையாகச் செயல்பட்டு வரும் சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் செவிலியர் தினம் இன்று (மே.12) கொண்டாடப்பட்டது.
அப்போது, ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேலின் உருவப் படத்துக்கு மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் மரியாதை செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து செவிலியரிடையே பேசிய டாக்டர் ரவீந்திரன், "மருத்துவர்கள் இடும் கட்டளைகள் மற்றும் அறிவுரைகளை ஏற்றுப் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் அருகில் சென்று அணுகும் செவிலியர் அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள்" என புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து உணர்ச்சிவசப்பட்ட அவர், கரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் செவிலியர் கால்களில் விழுந்து, "நீங்கள்தான் தற்போதைய சூழலில் கடவுள்" என்று கூறி கண்ணீர் விட்டார். இந்தச் சம்பவம் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT