Published : 12 May 2021 03:35 PM
Last Updated : 12 May 2021 03:35 PM
கரோனாவைத் தடுக்க 24 மணி நேரமும் அரசும், சுகாதாரத் துறையும் இயங்கி வருகிறது, ஆனாலும் கரோனாவால் பாதிக்கப்படுவோர், இறப்போர் எண்ணிக்கை அதிகரிப்பது கவலையளிப்பதாகத் துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் செவிலியர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. புதுவை அரசின் சுகாதாரத்துறை சார்பில் செவிலியர் கரோனா போராளிகளாக அறிவிக்கப்பட்டு, கோரிமேட்டில் உள்ள அன்னை தெரசா மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் செவிலியர் விழா நடந்தது. விழாவுக்குச் சுகாதாரத் துறைச் செயலர் அருண் தலைமை வகித்தார். இயக்குனர் மோகன்குமார் வரவேற்றார்.
துணைநிலை ஆளுநர் தமிழிசை செவிலியருக்குத் தலையில் கிரீடம் சூட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:
கரோனா போரில் முன்னெடுத்துச் செல்லும் செவிலியருக்கு வாழ்த்துக்கள். நான் ஆளுநர் மட்டுமல்ல, மருத்துவரும்தான். செவிலியர் பணியை மிக உயர்வாகக் கருதுகிறேன். நான் மருத்துவ மாணவியாக இருந்தபோது ஊசி போடச் செவிலியரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். வருங்கால மருத்துவ உலகம் எப்படியிருக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டு செவிலியர் செயல்பட வேண்டும்.
ஈடுபாட்டுடன் பணியைச் செய்யும் செவிலியர் தங்கள் உடல்நலத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும். ஒரு சில செவிலியர் உடல்நிலை பாதிக்கப்படுவதைக் கேள்விப்படும்போது வருத்தமடைகிறேன். உங்கள் உடல்நலத்தையும் கவனியுங்கள். நான் மருத்துவராக இரவு நேரப் பணியில் இருந்தபோது என்னோடு அதிகநேரம் செவிலியர்தான் இருந்தனர். அவர்களிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுள்ளேன். செவிலியரின் கரோனா பணி மிகவும் பாராட்டுக்குரியது. டாக்டர்கள் குறிப்புகளைத்தான் எழுதி தருவார்கள். நோயாளிகளுக்கு மருந்து அளித்து, சீராட்டி, பாராட்டிக் கவனிப்பது செவிலியர்தான்.
இதனால்தான் விவேகானந்தர் செவிலியர்போல வாழ வேண்டும் எனக் கூறியுள்ளார். கரோனாவைத் தடுக்க முகக் கவசம் அணிவதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் , தடுப்பூசி போடுவதும் முக்கியத்துவமானது. மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம். முகக் கவசம் அணியாமல், தனி மனிதக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்காமல் கரோனா போரில் வெற்றி பெற முடியாது. இந்த கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தால் கரோனாவைக் கட்டுப்படுத்தலாம்.
24 மணி நேரமும் அரசும், சுகாதாரத்துறையும் கரோனாவைத் தடுக்க இயங்கி வருகிறது. ஆனாலும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் மற்றும் இறப்போர் எண்ணிக்கையும், நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பது கவலையளிக்கிறது. தொலைபேசியில் ஆலோசனை, வழிகாட்டுதல்கள் கூறுவதை அதிகரித்துள்ளோம். இதனால் குறைகளை மட்டும் கூறாதீர்கள். அதற்குப்பதிலாக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளைச் சொல்லுங்கள்."
இவ்வாறு ஆளுநர் தமிழிசை பேசினார்.
இதைத் தொடர்ந்து மற்றொரு நிகழ்வில் இந்திய அரசிடமிருந்து பெறப்பட்ட 100 செறிவூட்டப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்களை சுகாதாரத்துறையிடம் ஆளுநர் அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT