Published : 12 May 2021 03:07 PM
Last Updated : 12 May 2021 03:07 PM
மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்ததற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவிவருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் கரோனாவுக்கு எதிரான பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். இந்தப் பணிகளின்போது மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் இறப்பதும் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், கரோனா தொற்றின் இரண்டாம் அலைக் காலமான, ஏப்ரல், மே, ஜூன்-மூன்று மாத காலத்திற்கு, மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும், செவிலியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும், இதர பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 12) அறிவித்தார்.
இது தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், "கரோனா பேரிடர் காலத்தில் உயிர் காக்கும் உன்னத சேவை புரிந்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களை கவுரவிக்கும் வகையில், ஊக்கத்தொகை வழங்க வேண்டுமென்று சில தினங்களுக்கு முன்பு நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஊக்கத்தொகையை அறிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
கொரோனா பேரிடர் காலத்தில் உயிர் காக்கும் உன்னத சேவை புரிந்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்க வேண்டுமென்று சில தினங்களுக்கு முன்பு நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று,
— O Panneerselvam (@OfficeOfOPS) May 12, 2021
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT