Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM
போச்சம்பள்ளி பகுதியில் வெயிலின் தாக்கம் மற்றும் மழையில்லாததால் பாகற்காய் செடிகள் காய்ந்து விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயி கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மா விளைச்சலை தொடர்ந்து விவசாயிகள் நெல், ராகி மற்றும் சிறுதானிய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்கின்றனர்.
இந்நிலையில் தற்போது பாகற்காய் சாகுபடியில் விவசாயி கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு சாகுபடி செய்யப்படும் பாகற்காய்கள், விற்பனைக்காக மொத்த வியாபாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கும், பெங்களூரு, குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் நிகழாண்டில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளதால், பாகற்காய் செடிகள் நீரின்றி காய்ந்து விளைச்சல் பாதித்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது, மழைக்காலங் களில் பந்தல் அமைத்து பாகற்காய் மானாவாரி பயிராக பயிரிடப்படுகிறது. இப்பயிர் 40 நாட்களில் காய்க்கத் தொடங்கிவிடும். அதில் இருந்து வாரத்திற்கு இருமுறை காய்களை பறித்து சந்தைகளுக்கு அனுப்புகிறோம். 6 மாதக்காலம் கொண்ட இப்பயிரால் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும்.
இதனால் போச்சம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் பாகற்காய் சாகுபடியில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், கோடை வெயிலின் தாக்கம், நிலத்தடி நீர்மட்டம் சரிவு, மழையின்மை உள்ளிட்டவையால் பாகற்காய் செடி காய்ந்துவிட்டது. விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாகற்காய் பயிர் செய்த விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்னர் விளைச்சல் அதிகளவில் இருந்தபோது விலை குறைவால் இழப்பு ஏற்பட்டது. சிறு விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT