Published : 11 May 2021 06:47 PM
Last Updated : 11 May 2021 06:47 PM
புதுச்சேரி இந்தியமுறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை வழங்கிய `ஆயுஷ் க்வாத்’ என்னும் 10 ஆயிரம் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துப் பொட்டலங்களை காவல்துறைக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று (மே.11) துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு ஆயுஷ் க்வாத் மருந்துப் பொட்டலங்களை டிஜிபி ரன்வீர்சிங் கிருஷ்ணியாவிடம் வழங்கினார். இந்த மருந்து புதுச்சேரியின் அனைத்து பிராந்தியங்களில் உள்ள காவல் பணியாளர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.
பின்னர் ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘புதுச்சேரியில் கரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இன்று நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அனைத்து நடவடிக்கைகளையும் மிகத் தீவிரமாக எடுத்தபின்பும் இத்தகைய சூழ்நிலையைச் சந்திக்கிறோம்.
இவ்வளவு கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இதைவிட அதிகமான பாதிப்பை நாம் சந்தித்து இருப்போம். எந்த விதத்திலும் ஒரு நோயாளி கூட இறப்பதை நம்மால் ஒப்புக்கொள்ள முடியாது. தற்போது இளம் வயதினர் அதிகம் உயிரிழக்கிறார்கள். இளம் வயதினர் அறிகுறி வந்தாலும் பரிசோதனை செய்து கொள்ளாமல் அலட்சியத்துடன் இருக்கிறார்கள்.
கரோனா தொற்று கண்டறியப்பட்ட பின்பும் கட்டுப்பாடு விதிகளைக் கடைப்பிடிப்பதில்லை. கரோனா தீவிரமாகப் பரவும் நிலையில் வெளியே அலைந்து நோய்த் தொற்றுக்கு ஆளாவதுடன் மற்றவர்களையும் தொற்றுக்கு ஆளாக்குகிறார்கள். அறிகுறி தெரிந்தும் வீட்டிலேயே இருந்துவிட்டு கடைசி நேரத்தில் மருத்துவமனைக்கு வருகிறார்கள். இவையெல்லாம் தடுக்கப்பட வேண்டும்.
ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இல்லையென்றால், எவ்வளவு படுக்கைகள், ஆக்சிஜனேட்டர்கள், ஆக்சிஜன்கள், வென்டிலேட்டர்கள் ஏற்படுத்தினாலும் அதற்குப் பலனில்லை. அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் மதியம் 12 மணி வரைதான் திறந்திருக்கும். அதற்கு மேல் யாரும் தெருக்களில் நடமாடக் கூடாது.
காவல்துறையைப் பொறுத்தவரை எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஆனால், நாம் தனி நபர்களாக முயற்சி மேற்கொள்ளவில்லை என்றால், எந்த நடவடிக்கையும் பலன் தராது. நெட்டப்பாக்கத்தில் இயற்கை முறையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஒரு மையம் 2 நாட்களில் தொடங்கப்படும்.
பிரதமரின் ஆக்சிஜன் தரும் திட்டத்தின் மூலம் ஏனாமிலும், இந்திரா காந்தி மருத்துவமனையிலும் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து ஆக்சிஜன் கிடைக்க ஆரம்பித்துள்ளது. ஏழை மக்களுக்கு ரூ.5க்கு உணவு வழங்கும் திட்டம் 40 பாண்லே பாலகங்களில் விரிவுபடுத்தப்படுகிறது.
நாளை (மே 12) உலக செவிலியர் தினம் என்பதால், கரோனாவுக்கு எதிராக உழைத்துக் கொண்டிருக்கும் செவிலியருக்கு மரியாதை செலுத்தும் விதமாக செவிலியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்க உள்ளோம். புதிய மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவக் குழு வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்து கொண்டிருக்கிறது.
நாம் எல்லா விதங்களிலும் நடவடிக்கை எடுத்தாலும், மக்கள் இதனை ஒரு அச்சத்தோடு அணுகவில்லை என்றால் நிச்சயமாக அச்சப்பட வேண்டிய சூழ்நிலை வந்துவிடும். ஏற்கெனவே 70 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்ட நிலையில், மேலும் 40 ஆக்சிஜன் சிலிண்டர்களை மத்திய அரசு ஜிப்மருக்கு வழங்கவுள்ளது.
சென்னையைப் போல் புதுச்சேரியும் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதி. அதனால் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வெளியில் நடமாடுவதைத் தடுத்தாலே கரோனா பயந்து ஓடிவிடும். இதனை முதலில் கடைப்பிடிக்க வேண்டும்.
எல்லா கடைகளையும் மூடிவிட்டால் மக்கள் சிரமப்படுவர் என்பதால்தான் அத்தியாவசியக் கடைகள் மட்டும் 12 மணி வரை திறக்கப்பட்டுள்ளன. முழு அடைப்பு மட்டுமே எல்லா இடங்களிலும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவதில்லை. மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் எவ்வளவு கட்டுப்பாடுகளை அறிவித்தாலும் அது பயன்தராது.
எனவே, தனி மனிதக் கட்டுப்பாட்டை மக்கள் விழிப்புணர்வு இயக்கமாக மாற்ற வேண்டும். மேலும், மக்கள் பங்களிப்போடு ஒரு ஆக்சிஜன் படுக்கைக்கு ஒருவர் ரூ.12 ஆயிரம் தானம் செய்யும் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.’’
இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
காவல்துறை டிஜிபி ரன்வீர்சிங் கிருஷ்ணியா பேசும்போது, ‘‘கரோனா பரவலைக் கட்டுப்படுத்த காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எல்லை தாண்டும் செயல்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. மருத்துவக் காரணங்களுக்கு மட்டும் அனுமதி தரப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT