Published : 11 May 2021 05:33 PM
Last Updated : 11 May 2021 05:33 PM

முழு ஊரடங்கால் வியாபாரிகள் வருகை குறைவு; பூக்களின் விலை கடும் சரிவு: இழப்பை சந்திக்கும் திண்டுக்கல் பூ விவசாயிகள்

திண்டுக்கல் 

திண்டுக்கல் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுவரும் முழு ஊரடங்கால் பூ க்களுக்கு உரிய விலை கிடைக்காமல் பூ விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் வேதனையடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சின்னாளப்பட்டி பெருமாள்கோவில்பட்டி, கலிங்கப்பட்டி, செம்பட்டி, வெள்ளோடு, உள்ளிட்ட பல கிராமங்கள் மற்றும் நிலக்கோட்டையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் பூ சாகுபடி பிரதானமாக உள்ளது.

கடந்த வருடம் கரோனா பாதிப்பால் விசேஷகாலங்கள், திருவிழாக்கள் அதிகம் நடைபெறும் மாதங்களில் ஊரடங்கு, கட்டுப்பாடுகள் என அரசு அறிவித்ததால் விளைந்த பூக்களை விற்பனை செய்ய முடியாமல் பெரிதும் சிரமத்திற்குள்ளாகி பூ விவசாயிகள் இழப்பை சந்தித்தனர். இழந்ததை இந்த ஆண்டு மீட்டுவிடலாம் என்ற ஆர்வத்தில் கடந்த சில மாதங்களாக பூ விவசாயத்தில் ஆர்வம் காட்டிவந்தனர்.

இந்நிலையில் கிராமப்புறங்களில் திருவிழாக்கள், விசேஷங்கள் அதிகம் நடைபெறும் நேரத்தில் தமிழக அரசு மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தியதால் தினமும் விளையும் பூக்களை மார்க்கெட்டிற்கு கொண்டுவந்தாலும் உரியவிலை இல்லாததால் இழப்பை சந்தித்துவருகின்றனர்.

கரோனா முதல் அலையில் இருந்து சிறிது மீண்ட நிலையில் மீண்டும் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பூ விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வராததால் பூக்களை அனுப்புவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் வியாபாரமும் வெகுவாக குறைந்தநிலையில் பூக்களின் விலை பெரும் சரிவை சந்தித்துள்ளது.

கடந்த இருவாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.300 க்கு விற்பனையானது, இன்று ஒரு கிலோ மல்லிகை விலை வெகுவாக குறைந்து ரூ.70 க்கு விற்பனையானது. முல்லைப்பூ ஒரு கிலோ ரூ.150 க்கு விற்பனையானது இன்று ரூ.30 க்கு விற்பனையானது. கனகாம்பரம் ரூ.200 க்கு விற்பனையானது, இன்று ரூ.100 க்கு விற்பனையானது.

ஒரு கிலோ பட்டுரோஸ் ஊரடங்கிற்கு முன்பு ரூ.80 க்கு விற்பனையானது. இன்று விலை பலமடங்கு குறைந்து ரூ.15 க்கு விற்பனையானது. கோழிக்கொண்டை பூ ரூ.30 க்கு விற்பனையானது ரூ.5 க்கும், சம்பங்கி ரூ.60 க்கும் விற்பனையானது. இன்று ஒரு கிலோ ரூ.5 க்கும் மிகவும் குறைந்து விற்கப்பட்டது. சென்டுமல்லி ஒரு கிலோ ரூ.7 க்கும், அரளி 10ரூபாயக்கும் விற்பனையாகின.

பூக்களை வாங்க உள்ளூர் வியாபாரிகள் குறைந்த அளவிலேயே வந்திருந்ததால் பூக்களை வாங்க ஆள் இல்லாதசூழ்நிலையில் விலை வெகுவாக குறைந்தது.

இது குறித்து பூ விவசாயி சகாயம் கூறுகையில்

இந்த விலை தொடர்ந்தால் பூக்களை பறிக்கும் கூலி, மார்க்கெட்டிற்கு கொண்டுவரும் செலவு ஆகியவற்றை கணக்கு பார்த்தால் ஒன்றும் மிஞ்சாது. எனவே வரும் நாட்களில் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிடும் நிலை தான் ஏற்படும். இதனால் பெரும் இழப்பு ஏற்படும், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x